search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பொருநை எனும் தாமிரபரணி
    X

    பொருநை எனும் தாமிரபரணி

    • தாமிரபரணி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
    • சமவெளியில் தாமிரபரணியுடன் சேரும் முதல் துணை ஆறு மணிமுத்தாறு.

    தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் ஆற்றின் நீளம் 125 கி.மீ. தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தியாகி, தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் அரசியல் சிக்கல்களுக்கு ஆட்படாத ஒரே நதி இதுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நதிக்கரையில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்று அகழ்வாய்வுகள் சுட்டிக் காட்டுகிறது.

    ஆறு கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில் தான் கொற்கை துறைமுகம் இருந்தது. இத்துறைமுகம் குறித்து "தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ" மற்றும் தாலமியின் "ஜியாகரபி" ஆகிய இரு நூல்களிலும் காணலாம். கொழும்புக்கு அருகில் இந்த துறைமுகம் இருந்ததால் பன்னாட்டு வணிகத்திற்கான திறவுகோல் என ஆங்கிலேயர்கள் கருதினர்.

    தமிழின் பழம்பெரும் இலக்கியங்கள் எல்லாம், இந்த நதியைப் 'பொருநை' எனக் குறிப்பிடுகின்றன. தாமிரபரணி என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வடமொழியில் 'தாம்ர' என்றால் செம்பு அல்லது சிவப்பு. 'பர்ண' என்றால் இலை. வர்ண என்றால் நிறம். எனவே செம்பு நிற ஆறு அல்லது சிவப்பு இலைகளுடனான ஆறு என்று இருந்திருக்க வேண்டும். அசோகர் கால கல்வெட்டுகளை ஆய்வு செய்த பிஷப் கால்டுவெல் தாப்ரபோனி தாம்ரபரணி மற்றும் தாம்பபாணி என்ற சொற்கள் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

    கடல் மட்டத்திலிருந்து 1867 மீ உயரமுள்ள பொதிகையிலிருந்து புறப்படும் தாமிரபரணி பாணதீர்த்தம் வரையில் அடர்ந்த வனங்களின் வழியே பயணித்து பள்ளத்தாக்கில் விழுகிறது. பாணதீர்த்தம் வருவதற்குள் பேயாறு, உள்ளாறு ஆகிய இரு நதிகளும், கீழிறங்கியவுடன் பாம்பாறும், கோரையாறும் இணைகிறது. இங்கிருந்து மெலிதாக இறங்கி, பின்னர் சமமான தளத்தில் செல்கிறது.

    முண்டந்துறை எனும் இடத்தில் தாமிரபரணியின் இடது புறத்தில் மற்றொரு முக்கிய ஆறான சேர்வலாறு இணைகிறது. சேர்வலாறை சேர்த்துக் கொண்டு வரும் தாமிரபரணி அகத்தியர் அருவி, கல்யாணி தீர்த்தம் என்ற பெயரில் நூறு மீட்டர் அருவியாகக் குதிக்கிறது. இங்கிருந்தே முழுமையாக அதன் சமவெளிப் பயணம் தொடங்குகிறது. சமவெளியில் தாமிரபரணியுடன் சேரும் முதல் துணை ஆறு மணிமுத்தாறு.

    செங்கல்தேரி என்ற அடர்ந்த வனப்பகுதியில் தோன்றி, மலைப் பகுதியிலேயே வரட்டாறு, குசுங்கிளியாறு, கீழ் மணிமுத்தாறு ஆகிய ஆறுகளை தன்னுள் இணைத்துக் கொண்டு தலை அணை என்ற அணைக்கட்டை அடைகிறது. அம்பாசமுத்திரம் அருகே கன்னடியன் அணைக்கட்டில் தாமிரபரணியுடன் மணிமுத்தாறு இணைகிறது.

    ராமநதி, ஜம்புநதி ஆகிய இரு நதிகளின் தண்ணீரை தாங்கிக் கொண்டு வரும் வராகநதி பின்னர் கடனாநதியில் இணைகிறது. வராகநதி கடனாநதியில் இணைவதற்கு முன்பே கல்லாறு, கருமேனியாறு கடனாநதியில் இணைந்துவிடும். மேலக்கடையத்திலுள்ள மலைப்பகுதியில் இந்த ஆறுகள் தோன்றுகின்றன.

    கடனாநதியில் அணைகட்டக் கோரி தோழர். நல்லகண்ணு உள்ளிட்ட ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அதன் விளைவாக அணை கட்டப்பட்டது. எனவே கடனாநதி அணைக்கு 'கம்யூனிஸ்ட்களின் கைக்குழந்தை'என்று பெயர். கடனாநதி திருப்புடை மருதூர் என்ற இடத்தில் தாமிரபரணியுடன் சங்கமிக்கிறது. களக்காடு மலையில் உற்பத்தியாகும் பச்சையாறு தருவை என்ற இடத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது.

    குற்றாலம் மலைப்பகுதியில் தோன்றும் ஆறு சிற்றாறு. சிற்றாற்றில் ஐந்தருவியாறு, ஹரிஹராநதி, அழுதகண்ணியாறு, ஹனுமாநதி கழுகுமலை உப்போடை ஆகிய ஐந்து துணையாறுகள் கலக்கிறது. ஹரிஹரா நதியில் குண்டாறு, மொட்டையாறும், ஹனுமா நதியில் கருப்பா நதியும் இணைகிறது. பல நதிகளை தன்னுடன் இணைத்து சிற்றாறு பேராறாக மாறி சீவலப்பேரி எனுமிடத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது.

    தாமிரபரணி தன்னுள் 137 துணை நதிகளை இழுத்துக் கொண்டு மன்னார்வளைகுடாவில் பழையகாயல் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. காயல் என்றால் கடலும் நதியும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். தாமிரபரணி வளம்மிக்க வண்டல் பகுதியை மட்டுமா உருவாக்கியது..?

    தாமிரபரணி உருவாக்கிய அழகிய நாகரீகம் தான் ஆதிச்சநல்லூர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் அந்த மூதாதையர்கள். அவர்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பாவிற்கு முந்தையவர்கள். ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தான் இந்தியாவில் நடந்த முதல் அகழ்வாய்வு.

    -சூர்யா சேவியர்

    Next Story
    ×