search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் டிரோன் மூலம் கிளர்ச்சிக்குழு தாக்குதல்: 2 பேர் பலி, 9 பேர் படுகாயம்
    X

    மணிப்பூர் டிரோன் மூலம் கிளர்ச்சிக்குழு தாக்குதல்: 2 பேர் பலி, 9 பேர் படுகாயம்

    • குகி- மெய்தி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் அமைதி நிலை திரும்பவில்லை.
    • முதலமைச்சர் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் தாக்குதல் என குகி சமூகத்தினர் குற்றச்சாட்டு.

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான சண்டை கடந்த வருடம் தொடங்கிய நிலையில் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் அமைதி நிலை திரும்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்த நிலையில்தான் ஆயுதம் ஏந்தி போராடி வரும் குகி கிளர்ச்சிக்குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்று மக்கள் நிறைந்த இடத்தில் டிரோன்களை பயன்படுத்தி அதன்மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் டிரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதால் புலனாய்வுக்குழு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார். அவரது 12 வயது மகள், இரண்டு போலீசார் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    டிரோன் ஒரு இடத்தில் பறந்ததாகவும் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் குண்டுகள் வெடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆயுதங்களுடன் இரண்டு டிரோன்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த தாக்குதல் மேற்கு இம்பாலில் கங்போக்பியில் உள்ள நகுஜங் கிராமத்தில் இருந்து கடங்பாண்ட் வரை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்னின்றன.

    கடங்பாண்ட் பகுதியில் வசித்து வரும் மக்கள், வீடுகள் உள்ள பகுதியில் டிரோன் ஒன்று வெடிகுண்டுகளை போட்டதாக தெரிவித்துள்ளனர். குகி கிளர்ச்சியாளர்கள் உயர்தொழில் நுட்பம் ஆர்.பி.ஜி. (RPGs) டிரோன்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. பொதுவாக டிரோன்கள் போர்களத்தில்தான் பயன்படுத்தப்படும். தற்போது மக்கள் வசிக்கும் இடத்தில் ஒரு கிளர்ச்சி குழுவால் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    கங்போக்பியை சேர்ந்த கங்பம் சுர்பாலா (வயது 31) என்ற பெண்மணி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிக்கை பலனின்றி உயிரிழந்தார்.

    கங்போக்பி குகி சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதி. மேற்கு இம்பால் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் பள்ளத்தாக்காகும்.

    இது தொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆயுதம் ஏதும் இல்லாத கிராம மக்கள் மீது டிரோன்கள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. குகி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு எடுத்து வரும் நிலையில், ஆயுதம் இல்லாத கிராம மக்கள் மீது இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் மாநில அரசால் மிகவும் தீவிரமாக பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குகி பயங்கரவாதிகள் பெண்ணை கொலை செய்துவிடட்னர் என மெய்தி சமூகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், மெய்தி சமூகத்தினரைச் சேர்ந்தவர்கள் கங்போப்கியில் உள்ள கிராமத்தில் தாக்குதல் நடத்தினர்.

    உள்துறை அமைச்சகத்தின் குழு விசாரணை நடத்தியது. அதில் மணிப்பூர் நெருக்கடியை முதல்வர்தான் தொடங்கினார் என்பது நிரூபணம் ஆனது என்ற ஆடியோ வெளியானது. அதில் இருந்துதான் தாக்குதல் தொடங்கியதாக குகி சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே இந்த ஆடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×