search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தூரில் கோவில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி தீவிரம்
    X

    இந்தூரில் கோவில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு- மீட்பு பணி தீவிரம்

    • இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
    • விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் படேல் நகரில் உள்ள ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு ராமநவமியை ஒட்டி இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது, படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனையடைந்தேன். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹானிடம் பேசி நிலைமை குறித்து கேட்டு அறிந்துக்கொண்டேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்" என்றார்.

    மேலும், விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சவுகான் கூறுகையில், " இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இருப்பினும் மீட்புப் பணி நடந்து வருகிறது. இதுவரை, 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. அனைவரையும் மீட்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

    Next Story
    ×