search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கலப்பட மருந்து சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்- மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்
    X

    கலப்பட மருந்து சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்- மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்

    • குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய ஒரு நிறுவனத்தின் மாதிரிகளை பரிசோதித்தோம்.
    • கலப்பட மருந்து விஷயத்தில், சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு, காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் அவர்கள் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    உலகத்துக்கே இந்தியாதான் மருந்தகம். அதுமட்டுமின்றி, தரமான மருந்தகம் என்பதை ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

    அந்தவகையில், இந்திய மருந்துகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டவுடன், அதுபற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள விரும்பினோம். உதாரணமாக, காம்பியா நாட்டில் இந்திய மருந்துகளால் குழந்தைகள் இறந்ததாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த யாரோ ஒருவர் கூறியிருந்தார்.

    அதுபற்றிய உண்மைகளை தெரிவிக்குமாறு அந்த அமைப்புக்கு கடிதம் எழுதினோம். ஆனால் பதில் வரவில்லை.

    இருப்பினும், குழந்தைகளின் மரணத்துக்கான காரணத்தை அறிய ஒரு நிறுவனத்தின் மாதிரிகளை பரிசோதித்தோம். அப்போது, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தது தெரிய வந்தது. வயிற்றுப்போக்கு இருக்கும்போது, இருமல் மருந்தை பரிந்துரைத்தது யார்?

    கலப்பட மருந்து விஷயத்தில், சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. இந்தியாவில், தரமான மருந்துகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கலப்பட மருந்தால் யாரும் இறக்கக்கூடாது என்று ஒழுங்குமுறை அமைப்புகளை உஷார்படுத்தி வருகிறோம்.

    கலப்பட மருந்து குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதால், 71 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவற்றில் 18 நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×