search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முற்றிலும் சமரசம்: தேர்தல் ஆணையம் மீது ஆதித்யா தாக்கரே கடும் தாக்கு
    X

    முற்றிலும் சமரசம்: தேர்தல் ஆணையம் மீது ஆதித்யா தாக்கரே கடும் தாக்கு

    • அஜித் பவார் தலைமையிலான அணிதான் தேசியவாத காங்கிரஸ் என அங்கீகரிக்கப்பட்டது.
    • கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் அதிகாரமும் அஜித் பவார் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்களை பிரித்துக் கொண்டு சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் ஏக் நாத் ஷிண்டேவின் ஆட்சியில் இணைந்து அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    சரத் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். அதேவேளையில் அஜித் பவார் நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றார். இதனால் இரு தரப்பிலும் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையையும் வழங்கியது.

    இது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மகனும், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "தேர்தல் ஆணையம் தானாகவே திருட்டை சட்டப்பூர்வமாக்கத் தொடங்கும்போது, ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியும். தேர்தல் ஆணையம் மோசடி செய்தது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. அது தேர்தல் ஆணையம் அல்ல. "முற்றிலும் சமரசம் (Entirely Compromised)". நாங்கள் சுதந்திரமானவர்கள் அல்ல, நியாயமான ஜனநாயகம் இல்லை என்பதை அனைவருக்கும் அவர்கள் காட்டுகிறார்கள்" என்றார்.

    முன்னதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பிரிந்து சென்று நாங்கள்தான் சிவசேனா கட்சி எனத் தெரிவித்தது. அத்துடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான விவகாரத்திலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×