என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால் எந்த கோப்புகளிலும் கையெழுத்திட முடியாதா? வழக்கறிஞர் சொல்வது என்ன?
- கெஜ்ரிவாலை கைது செய்யத்தேவையில்லை என்று 22 மாதங்களாக சி.பி.ஐ. நினைத்திருந்தது.
- அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதால், டெல்லியில் நிர்வாக நெருக்கடி இருக்காது என்று கூறினார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் 21-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது.
இருப்பினும், அதற்கு முன்பே ஜூன் 26-ந் தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. அதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அம்மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், கடந்த 5-ந்தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. ரூ.10 லட்சம் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான 2 பேரின் உத்தரவாதத்துடன் கெஜ்ரிவாலை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
நீதிபதி சூரியகாந்த் தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகிவிடும். புதிய சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, விசாரணை உரிய நேரத்தில் முடிவடையாது. மனுதாரர், ஜாமீன் பெற தகுதியானவர்.
கெஜ்ரிவாலை கைது செய்ததற்கான காரணங்களை சி.பி.ஐ. தனது மனுவில் தெரிவித்துள்ளது. அவற்றில் விதிமீறல்கள் இல்லை. எனவே, கைதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை.
கெஜ்ரிவால் சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் தேவையற்றது. இருப்பினும், வழக்கின் தகுதிநிலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது. ஒவ்வொரு வாய்தாவின்போதும் அவர் ஆஜராக வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமலாக்கத்துறை ஜாமீன் அளித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஜாமீன் காலத்தில் தனது அலுவலகத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. கவர்னரின் ஒப்புதல் பெற தேவையில்லாதபட்சத்தில், கோப்புகளில் அவர் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. சாட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் கூறியது.
மேற்கண்ட நிபந்தனைகள் இப்போதும் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
நீதிபதி உஜ்ஜால் புயன், தனியாக தீர்ப்பு எழுதி உள்ளார். அதில், சி.பி.ஐ.யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
சி.பி.ஐ. ஒரு முதன்மையான விசாரணை அமைப்பு. சி.பி.ஐ., சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருப்பது மட்டுமின்றி, அப்படி இருப்பது கண்முன்பு தெரிய வேண்டும். விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை என்றோ, பாரபட்சமான முறையில் கைது செய்யப்பட்டதாகவோ கண்ணோட்டம் உருவாவதை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஜனநாயகத்தில், கண்ணோட்டம் மிகவும் முக்கியமானது. சீசரின் மனைவி போல், ஒரு விசாரணை அமைப்பு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
சிறிது காலத்துக்கு முன்பு, சி.பி.ஐ.யை கூண்டுக்கிளியுடன் ஒப்பிட்டு, இதே கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. கூண்டுக்கிளியாக இருக்கிறது என்ற எண்ணத்தை சி.பி.ஐ. அகற்றுவது முக்கியம். கூண்டில் அடைக்கப்படாத கிளியாக இருப்பதாக உணர்த்த வேண்டும்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கடுமையான சட்டப்பிரிவுகளில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், அதே குற்றத்துக்காக சி.பி.ஐ. வழக்கில் காவலில் வைத்திருப்பது தேவையற்றதாகி விட்டது. அது நீதியை கேலி செய்யும் செயல்.
கெஜ்ரிவாலை கைது செய்யத்தேவையில்லை என்று 22 மாதங்களாக சி.பி.ஐ. நினைத்திருந்தது. ஆனால், அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கப்போகிறது என்றவுடன் சி.பி.ஐ. அவசரமாக கைது செய்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கெஜ்ரிவால் சரிவர பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தை காட்டி, அவரை கைது செய்ததை சி.பி.ஐ. நியாயப்படுத்த முடியாது.
அதுபோல், அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீது எனக்கு கடுமையான ஆட்சேபனைகள் உள்ளன. ஆனால், நீதித்துறை ஒழுக்கம் காரணமாக, அந்த நிபந்தனைகள் பற்றி நான் கருத்து கூற மாட்டேன்.
இவ்வாறு நீதிபதி உஜ்ஜால் புயன் கூறியுள்ளார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் இருக்கும் போது எந்த கோப்புகளிலும் கையெழுத்திட முடியாது என்று தகவல் பரவியது.
இந்நிலையில், எந்த கோப்புகளிலும் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திட முடியாது என்று பரவும் தகவல் தவறானது என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது;-
பிஎம்எல்ஏ வழக்கில் ஏற்கனவே ஜூலை 12-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, இன்றைய (நேற்று) உத்தரவில் கமா அல்லது முற்றுப்புள்ளியோ சேர்க்கவில்லை.
கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டிய ஒரே கோப்புகள் லெப்டினன்ட் கவர்னிடம் செல்ல வேண்டும். லெப்டினன்ட் கவர்னரிடம் செல்ல வேண்டிய அனைத்து கோப்புகளிலும் கெஜ்ரிவால் கையெழுத்திடலாம் என்று ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மற்றவற்றில் அவரது அமைச்சர்கள் கையெழுத்திடலாம். அவரால் செயல்பட முடியாது என்று கூறுவது அரசியல். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இதுபோன்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யக் கூடாது என்றுதான் நான் கூறுவேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதால், டெல்லியில் நிர்வாக நெருக்கடி இருக்காது என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்