search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    எதிர்க்கட்சிகளால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது: அமித்ஷா உறுதி
    X

    எதிர்க்கட்சிகளால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது: அமித்ஷா உறுதி

    • காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன.
    • மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது.

    ஜம்மு :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் பாகவதி நகர் பகுதியில், பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி நினைவுதினத்தையொட்டி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    பாட்னாவில் 'புகைப்பட படப்பிடிப்பு' நடந்து வருகிறது. பிரதமர் மோடியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து வருகின்றன. நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது. அப்படியே ஒற்றுமையாக இருந்தாலும், மோடியை தோற்கடிக்க முடியாது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பா.ஜனதா 300-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராவார்.

    காஷ்மீரை 3 குடும்பங்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆட்சி செய்தன. அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு இருந்ததால், எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.

    பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானார்கள். இருப்பினும், அந்த குடும்பத்தினர் 370-வது பிரிவை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவையும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபாவையும் கேட்கிறேன். பயங்கரவாதத்தால் 42 ஆயிரம் பேர் பலியானதற்கு யார் பொறுப்பேற்பது?

    காஷ்மீரில் ஜி-20 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக கவர்னர் மனோஜ் சின்கா மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். அதில் பங்கேற்றவர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.

    அனுமதி பெறாமல் காஷ்மீரில் நுழைந்ததாக சியாம பிரசாத் முகர்ஜி, 1953-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கொலை செய்யப்பட்டார். 370-வது பிரிவு நீக்கத்தால் அவரது லட்சியம் நிறைவேறிவிட்டது. 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிந்தைய 47 மாத காலத்தில், காஷ்மீரில் 32 தாக்குதல் சம்பவங்கள்தான் நடந்தன. கல்வீச்சு சம்பவங்கள் 90 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு, முதல் முறையாக 1 கோடியே 88 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் மீதான பிடி இறுகியது. ஊழலற்ற இந்தியாவுக்கு மோடி வலிமையான அடித்தளம் அமைத்துள்ளார்.

    அவரது 9 ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட கிடையாது. மோடி ஒரு திறந்த புத்தகம்.

    பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு காஷ்மீர் மக்கள் ஆதரவு தர வேண்டும். மோடியையும், ராகுல்காந்தியையும் ஒப்பிடவே முடியாது. ராகுல்காந்தி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×