search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்: ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
    X

    விழாக்கோலம் பூண்டது அயோத்தி நகரம்: ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

    • உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
    • கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது.

    உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது.

    கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கின. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சார்யார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே கோவில் கருவறையில் ராஜ உடையில் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. தற்போது, சிலையில் கண்கள் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டு உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது துணி அகற்றப்படும்.

    உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறும்.

    கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அயோத்தி நகர எல்லையில் தங்கியுள்ளனர். இதனால் நகரம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்தி நகரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே விழாக்கோலம் பூண்டது. கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மராட்டிய மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 7 ஆயிரத்து 500 அலங்கார செடிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

    இதுதவிர இரவு நேரத்தில் கோவில் வளாகம் ஜொலிக்கும் வகையில் வண்ண வண்ண மின்விளக்கு சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கிய கோவில்களும், அயோத்தி அரச குடும்ப மாளிகையான 'ராஜ் சதன்' ஆகியவையும் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, தீபாவளி பண்டிகையைபோல் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    அதன்படி இன்று இரவு அயோத்தியில் 10 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். அதுபோல், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 'ராம ஜோதி' ஏற்றி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×