search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெய்சங்கரிடம் பேசிய இங்கிலாந்து மந்திரி: ஷேக் ஹசீனாவின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
    X

    ஜெய்சங்கரிடம் பேசிய இங்கிலாந்து மந்திரி: ஷேக் ஹசீனாவின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

    • ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ள நிலையில், ஜெய் சங்கரிடம் இங்கிலாந்து மந்திரி பேசியுள்ளார்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எகஸ் பக்கத்தில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி தன்னிடம் பேசியதாகவும், அப்போது வங்காளதேசத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பேசியதாகவும், வங்காளதேசம் மற்றும் மேற்கு ஆசியாவின் சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் நிரந்தரமாக அடைக்கலம் கொடுக்கப்போகும் நாடு எது? என்பதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேசியது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் குறித்து பேசியதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    வங்காளதேசத்தில் அசாதாரண நிலை நிலவியதால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவசரமாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இங்கிலாந்தில் குடியேற அரசியல் அடைக்கலம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் இங்கிலாந்து குடியேற்ற சட்டப்படி தனிநபர் இங்கிலாந்து சென்று அங்கு அடைக்கலம் கோர முடியாது. இதனால் இங்கிலாந்து இந்த விசயத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது.

    இதற்கிடையே இந்தியா நிரந்தரமாக அடைக்கலம் வழங்க தயாராக இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகள் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் அடைக்கலம் திட்டத்தை ஷேக் ஹசீனாவின் மகன் மறுத்துள்ளார்.

    ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் தொடங்கிய நிலையில், பின்னர் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஷேக் ஹசீனாவுடன் இந்தியா வந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஷேக் ஹசீனாவின் அடுத்த நகர்வு என்ன? என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை, இந்தியாவுக்கு அதுகுறித்த எந்த அப்டேட்டும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×