search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்தார்.. ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார்
    X

    பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்தார்.. ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார்

    • மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட 21 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட புகார் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • மக்களவையில் பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியாவின் குரலை கொன்று விட்டீர்கள், அதாவது மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என மத்திய அரசை சாடினார். அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் 21 பேர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். 21 பேரும் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை சபாநாயகரின் அலுவலகத்தில் ஷோபா கரந்த்லாஜே சமர்ப்பித்தார்.

    அந்த கடிதத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி தங்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மக்களவையில் பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்தது மட்டுமல்லாமல், அவையின் கண்ணியத்தை குறைத்த ராகுல் காந்தியின் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் கூறி உள்ளனர்.

    மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல்காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பாஜக பெண் எம்.பி.க்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான வீடியோ அல்லது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான தனது உரையை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி வெளியேறும் போது, சில கோப்புகளை கீழே போட்டுவிட்டு, அவற்றை எடுப்பதற்காக குனிந்தபோது, சில பாஜக எம்பிக்கள் அவரைப் பார்த்து சிரித்ததகாவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×