search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது
    X

    நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது

    • இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.
    • கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமானது. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை சமூகம் வாரியாக ஆராய்ந்து செயல்படுத்த முடியும்.

    இந்தியாவில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. 16-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடித்து விவரங்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த கணக்கெடுப்புக்கான கேள்விகள் தயாராகி உள்ளன. மொத்தம் 31 கேள்விகள் அதில் அடங்கி இருப்பதாக தெரிகிறது. குடும்பத்தலைவர், வீடு, நிலம் உள்ளிட்ட கேள்விகளுடன் செல்போன் இருக்கிறதா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? கழிவறை வசதி இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

    கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் முடித்து, அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை பணிகளை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த 2 வேலைகளும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு செய்யப்பட்டு விடும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகூட சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்துள்ளது. ஆனால் அரசு இதுபற்றி எந்த முடிவையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

    மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எல்லையை மறுவரையறை செய்வது, தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மக்கள்தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. ஆனால் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தாமதம் ஆகிவிட்டதால், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2035-ம் ஆண்டு, அதற்கு அடுத்து 2045-ம் ஆண்டு என சுழற்சி முறையில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×