search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி: சத்தீஸ்கரில் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதி
    X

    பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி: சத்தீஸ்கரில் பா.ஜனதா தேர்தல் வாக்குறுதி

    • சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா்.

    ராய்பூர்:

    90 உறுப்பினா்களைக்கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவ. 7-ந் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சத்தீஸ்கா் 2023-க்கான மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பிலான பா.ஜ.க. தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டாா்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

    சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 வீதம் கொள்முதல் செய்யப்படும். இதற்கான பணம் ஒரே தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    திருமணமான பெண்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ், அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 நிதியுதவி அளிக்கப்படும். நிலமில்லா ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கப்படும்.

    கல்லூரி செல்லும் மாணவா்களுக்கு மாத பயணப்படி நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிரப்பப்படும்.

    பிரதமரின் வீட்டு வசதி (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 2 ஆண்டுகளுக்குள் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் வழங்கப்படும்.

    அனைத்துக் குடிமக்களுக்கும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 50 சதவீத பங்களிப்பு தொகையை மாநில அரசு ஏற்கும்.

    சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா். இவ்வாறு பா.ஜ.க. தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் 20 வாக்குறுதிகளை அமித் ஷா விவரித்தாா்.

    Next Story
    ×