search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல்வர் நாற்காலி ... நெருக்கும் பட்னாவிஸ் - நகர்வாரா ஷிண்டே - அஜித் பவார் அவுட் ஆப் சிலபஸ்... பிளான் இதுதான்!
    X

    முதல்வர் நாற்காலி ... நெருக்கும் பட்னாவிஸ் - நகர்வாரா ஷிண்டே - அஜித் பவார் அவுட் ஆப் சிலபஸ்... பிளான் இதுதான்!

    • அதிகபட்சமாக 132 எம்எல்ஏக்களை பாஜக வைத்துள்ளது
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர்

    மகா. தேர்தல்

    288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக 132- ஷிண்டே சேனா 57 - அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5 ] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. எதிரணியான மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் 16, சரத் பவார் என்சிபி 10, உத்தவ் சிவ சேனா 20] என மொத்தம் 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    எதிர்கட்சித் தலைவராக 28 எம்எல்ஏக்கள் வைத்திருக்க வேண்டும் என்ற சூழலில் கூட்டணியின் அதிகப்பட்ச எம்எல்ஏ எண்ணிக்கையே சிவசேனாவின் 20 தான் என்ற நிலையில் மகாராஷ்டிராவில் எதிர்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இது கடந்த 57 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மோசமான தோல்வி ஆகும்.

    முதல்வர் நாற்காலி

    நிலைமை இப்படியிருக்க வெற்றி பெற்ற பாஜகவின் மகாயுதி கூட்டணியில் முதல்வர் நாற்காலிக்கான குடுமிப்பிடி சண்டை தொடங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆளும் சிவசேனாவை உடைத்து ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே பாஜக பக்கம் தாவியதால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஷிண்டேவை முதலமைச்சராக்கி பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து அங்கிருந்து பாஜகவுக்கு ஜம்ப் அடித்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2014 முதல் 2019 காலத்தில் மகா. முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக இருந்தார்.

    இந்நிலையில் தற்போதைய தேர்தல் வெற்றிக்கு பின்னர் அஜித் பவார் முதல்வர் ஆக வேண்டும் என அவரது கட்சியினரும், தேவேந்திர பட்நாவிஸ் தான் முதல்வர் என பாஜகவினரும் மீண்டும் நாற்காலியை பிடிக்க ஏக்நாத் ஷிண்டேவும் போட்டி போட்டு வருகின்றனர்.

    ஆர்எஸ்எஸ் கை

    இந்த தேர்தலில் வென்று அதிகபட்சமாக 132 எம்எல்ஏக்களை பாஜக வைத்துள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நாளையுடன் சட்டசபை பதவிக்காலம் காலாவதியாக உள்ள நிலையில் இன்றே முதல்வர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகா. பார்முலா

    மகா. வெற்றிக்கு உழைத்த ஆர்எஸ்எஸ் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக தலைமைக்குப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஷிண்டே விட்டுக்கொடுத்தால் அவரும், அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை ஏற்பார்கள். இந்த டீலிங்கை சுமூகமாக முடிக்க அஜித் பவாரை வைத்து ஏக்நாத் ஷிண்டேவிடம் பாஜக காய் நகர்த்துவதாக மகா. வட்டாரங்கள் கூறுகின்றன.

    எனவே மகா. அரசில் முதல்வர், இரு துணை முதல்வர்கள் என்ற பார்முலா தொடரும். மேலும் 6-7 எம்எல்ஏகளுக்கு ஒரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி பாஜகவிலிருந்து 22-24, சிவசேனா 10-12, தேசியவாத காங்கிரஸ் 8-10 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.

    Next Story
    ×