search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர்  வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் - கார்கேவுக்கு நட்டா போட்ட ரிப்ளை
    X

    மணிப்பூர் வன்முறைக்கு காங்கிரஸ் தான் காரணம் - கார்கேவுக்கு நட்டா போட்ட ரிப்ளை

    • ப. சிதம்பரம் கையெழுத்திட்டதை கார்கே மறந்து விட்டார்போலும்.
    • இரட்டை என்ஜின் NDA அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.

    மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் பாஜக கலவரத்தையே விரும்புவதாக விமர்சித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் பிரச்சனைகளை கையாள்வதில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மணிப்பூர் இன்னமும் மீளவில்லை.

    ஆனால் மத்திய மாநில பாஜக அரசு மணிப்பூர் வன்முறை தொடங்கியது முதல் நிலைமையை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு போராளிகளின் சட்டவிரோத குடியேற்றத்தைக் காங்கிரஸ் அரசு சட்டப்பூர்வமாக்கியது. இதற்கான ஒப்பந்தங்களில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கையெழுத்திட்டதை கார்கே மறந்து விட்டார்போலும்.

    இந்த அறியப்பட்ட போராளித் தலைவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். உங்கள் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக தோல்வியே அமைதியை அழித்து, மணிப்பூரைப் பின்னோக்கி தள்ளியுள்ளது.

    அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும் என்று போராளிக் குழுக்கள் முயல்வதற்கு இதுவே காரணம். காங்கிரஸைப் போலல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதை எந்த வகையிலும் அனுமதிக்காது.

    கார்கேவின் குற்றச்சாட்டுத் தவறான, பொய்யான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றாகும் மோடி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் வடகிழக்கு பகுதி முழுமையான மாற்றத்தைக் கண்டுள்ளது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை புறக்கணித்து இரட்டை என்ஜின் NDA அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.

    ஆனால் இந்த முன்னேற்றங்களைப் புறக்கணித்து, நீங்களும் உங்கள் கட்சியும் வடக்கு கிழக்கையும் அதன் மக்களையும் அரசியல் லாபம் ஈட்டவும், கேவலமான அரசியலுக்கும் பயன்படுத்துகிறீர்கள் என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கார்கே, நட்டாவின் கடிதம் முழுக்க முழுக்க பொய்களில் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×