search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி: என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்
    X

    தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி: என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

    • பி.எப்.ஐ. அமைப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி செய்துள்ளனர்.

    புதுடெல்லி :

    ஐ.எஸ். போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கடந்த 22-ந்தேதி அதிரடி சோதனைகளை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 27-ந்தேதியன்று உத்தரபிரதேசம், கர்நாடகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், அந்தந்த மாநில போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி, 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவை வருமாறு:-

    * ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 15 இளைஞர்களையும், இவர்களது கூட்டாளிகளையும் கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதச்செயல்களை அரங்கேற்றும் நோக்கத்துடன் ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தாக்க சதி செய்துள்ளனர்.

    * வெடிபொருட்களையும், பிற தாக்குதல் பொருட்களையும் கொண்டு, முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி அரசுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்துள்ளனர்.

    * தமிழ்நாட்டில் கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானலுக்கு வருகிற வெளிநாட்டினரை குறிப்பாக யூதர்களை தாக்குவதற்கும், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களைத் தாக்குவதற்கும் சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

    இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பி.எப்.ஐ. அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பு, அந்த டுவிட்டர் பக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. "சட்டப்பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×