search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தீவிர புயலாக மாறியது டானா: ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கிறது
    X

    தீவிர புயலாக மாறியது டானா: ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கிறது

    • மேற்கு வங்கத்தில் விமானம், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
    • அதிகனமழை பெய்யும் என்பதால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலாக வலுப்பெற்று, நேற்று டானா புயலாக மாறியது. கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் டானா புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஒடிசா- மேற்கு வங்கம் கடற்பகுதியில் ஒடிசாவின் பிட்டார்கனிகா மற்றும் தமரா பகுதியை ஒட்டிய பூரி- சாகர் தீவு இடையே கரையை கடக்கும். இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரையிலான காலக்கட்டத்தில் கரையை கடக்கும். இந்த தீவிர புயல் காரணமாக 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த தீவிர புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று மாலை முதல் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. சுமார் 190 உள்ளூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்படுகின்றன.

    ஒடிசாவிலும் விமான சேவைகள் இன்று மாலை நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மணி நேரப்படி மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும், ஒடிசாவின் பரதிப்பில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீட்டர் தூரத்திலும், ஒடிசாவின் தமராவின் தெற்கு-தென்கிழக்கே 360 கி.மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவின் தெற்கு-தென்கிழக்கு 420 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

    Next Story
    ×