search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
    X

    சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

    • ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது
    • செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, 'விக்சித் பாரத்' என்ற சிந்தனையோடு கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்கிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. நாளை சுதந்திரதின விழா எப்படி நடைபெறுமோ அதைப்போல நேற்று விழா நடத்திப் பார்க்கப்பட்டது. இதில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்றனர். மேலும் துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி. உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்றது.

    நிகழ்ச்சியையொட்டி தேசியக்கொடி ஏற்றி வணக்கம் தெரிவித்தனர். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மேலே பறந்து பூக்களை தூவப்பட்டது.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் ஒருகட்டமாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாக செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. டெல்லி ஒத்திகை போல நாடு முழுவதும் முக்கிய அமைப்புகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஆகியோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.

    செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

    டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சுதந்திர தினவிழாவில் பல்வேறு தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி ஊழியர்கள், 'ஒன் ஸ்டாப்' மைய ஊழியர்கள், குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×