என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல்: தேர்தல் கமிஷன் தகவல்
- முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகள், அன்றைய தினம் வாக்குப்பதிவை சந்திக்கின்றன.
கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அத்துடன், வாக்காளர்களுக்கு நகை, பணம், இலவச பொருட்கள், மதுபானம் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.
இதுவரை பிடிபட்ட பொருட்கள் பற்றிய புள்ளி விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்கட்ட தேர்தல் 19-ந் தேதிதான் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூ.4 ஆயிரத்து 650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை, பணம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ரூ.3 ஆயிரத்து 475 கோடி மதிப்புள்ள பொருட்கள்தான் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது, ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அதைவிட அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்டவற்றில், போதைப்பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் மட்டும் ரூ.2 ஆயிரத்து 69 கோடி மதிப்புடையவை. அவை மொத்த மதிப்பில் 45 சதவீதம் ஆகும். அவற்றை பிடிக்க தேர்தல் கமிஷன் சிறப்பு கவனம் செலுத்தியது.
ரொக்கப்பணம் மட்டும் ரூ.395 கோடி பிடிபட்டுள்ளது. மதுபானங்களின் மதிப்பு ரூ.489 கோடி ஆகும்.
மாநிலவாரியாக பார்த்தால், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.778 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பிடிபட்டுள்ளன.
தேர்தல் கமிஷன் கண்காணிப்பில், கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து நாள்தோறும் ரூ.100 கோடி மதிப்புடைய பொருட்கள் பிடிபட்டு வருகின்றன.
இதற்கு முறையான திட்டமிடல், அரசு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப உதவி ஆகியவைதான் காரணங்கள் ஆகும்.
தேர்தல் பிரசாரத்திலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதிலும் அரசியல்வாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 106 அரசு ஊழியர்கள் மீதும் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகால மக்களவை தேர்தல் வரலாற்றில், இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல்முறை ஆகும். லஞ்ச வினியோகம் இல்லாமல், நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உறுதிப்பாட்டை இது உணர்த்துகிறது.
ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தப்படுவது புதிதல்ல. அதனால், விமான தளங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளங்களை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வான்மார்க்கமாக பணம், இலவச பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்க இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்