search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் கடற்படை வீரர்கள் சம்பவத்தை சுட்டிக்காட்டி விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அனுராக் தாகூர்
    X

    முன்னாள் கடற்படை வீரர்கள் சம்பவத்தை சுட்டிக்காட்டி விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அனுராக் தாகூர்

    • விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
    • தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால்தான் தீர்வு காணப்படும்.

    விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் பஞ்சாப்-அரியானா, டெல்லி- பஞ்சாப், அரியானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

    விவசாயிகள் முன்னேற முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் சுமார் ஆறு மாத காலத்திற்கு பேரணி நடத்தும் வகையில் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். இதனால் 2020-21 போராட்டம் போன்று நீடித்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது.

    இதனால் அவர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரிகளுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக சட்டம் நிறைவேற்றிட முடியாது என மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையும் மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதனால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-

    கத்தாரில் தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வந்தது, உக்ரைன்- ரஷியா போரின்போது 27 ஆயிரம் இந்தியர்கள் கங்கா ஆபரேசன் நடவடிக்கையின் கீழ் இந்தியா அழைத்து வந்தது, கோடிக்கணக்கான இந்தியர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வந்தது என இதுபோன்ற சாதனைகள் எல்லாம் பேச்சுவார்த்தைகள் மூலம் நடந்தவைகள்தான். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நமது விவசாய சகோதரர்கள் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதுதான்.

    மத்திய மந்திரிகள் இரவு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய பிரதிநிதிகள் வெளியேறிவிட்டனர். அப்போது கூட பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தையில் தொடரவில்லை.

    பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால், அவர்கள் புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

    உலக வணிக அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியா இருக்க அவர்கள் விரும்பவில்லை. இலவச வணிக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை அவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பார்க்கக் கூடாது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார திருத்த மசோதாவிற்குள் கொணடு வரக்கூடாது என்கிறார்கள்.

    இதுதொடர்பாக நாங்கள் கமிட்டி அமைப்பதாக அவர்களிடம் தெரிவித்தோம். இல்லையெனில் வேளாண் மந்திரியுடன் நாங்கள் ஆலோசனை நடத்த முடியும் என்றோம். மாநிலங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் நாங்கள் பேச வேண்டும். உங்களுடைய அதிகப்படியான கோரிக்கைகளை நாங்கள் சந்திக்கும்போது, பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும்.

    நாட்டிற்கு இழப்பிற்கு ஏற்படும் வகையில் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. நீண்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட பிரதமர் மோடி அரசு அதிக அளவிலான விளைபொருட்களை கொள்முதல் செய்துள்ளது. பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் சட்டமாக்கப்படும் என உறுதி அளிக்கிறார். மக்கள் வாக்களித்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு மரியாதை அளிக்க மாட்டார்கள். எம்.எஸ்.பி. சட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

    Next Story
    ×