search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    kangana ranaut
    X

    விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச வன்முறையுடன் ஒப்பிட்டு கங்கனா சர்ச்சை கருத்து

    • விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது.
    • போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின.

    சண்டிகர் விமான நிலையத்தில் குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர், பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையானது.

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசியிருந்தார்.இதன் காரணமாகவே கங்கானா கன்னத்தில் அறைந்ததாக பெண் காவலர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மீண்டும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா பேசியுள்ளார்.

    ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், "விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது, இல்லை என்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று கங்கனா பேசியுள்ளார்.

    கங்கானாவின் இந்த கருத்துக்கு பாஜக கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மாதிரியான சர்ச்சை கருத்துக்களை கங்கனா வெளியிட கூடாது என்று பஞ்சாப் பாஜக மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால் தெரிவித்துள்ளார்.

    இன்னும் சில வாரங்களில் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கங்கானாவின் இந்த கருத்து பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

    Next Story
    ×