search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிதைந்த உடல்கள்... ரத்த கறையில் தண்டவாளங்கள்... பதற வைக்கும் விபத்துக்களம்
    X

    சிதைந்த உடல்கள்... ரத்த கறையில் தண்டவாளங்கள்... பதற வைக்கும் விபத்துக்களம்

    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ஒடிஷா ரெயில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி அனுபவ தாஸ் என்பவர் தான் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பான பதிவில் அவர், "ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியது. பின்னர், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.

    ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்த நான், காயமின்றி தப்பியதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது மிகப்பெரிய ரெயில் விபத்து.

    பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பொது பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரெயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார். அவர்களுக்கு எனது இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×