search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கவர்னர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
    X

    கவர்னர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

    • கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.
    • கவர்னர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு எதிரான தாராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் சில அரசியல் சக்திகளால் என் மீது அடிக்கடி வரும் இழிவுபடுத்தல்களை நான் வரவேற்கிறேன்.

    ஆனால் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும் நான் எடுக்கும் உறுதியான முயற்சிகளில் இருந்து இந்த அபத்தமான நாடகங்கள் எதுவும் என்னைத் தடுக்கப் போவதில்லை.

    கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.

    உங்கள் ஆயுதக் கிடங்கில் இருந்து அனைத்து ஆயுதங்களையும் வெளியே கொண்டு வாருங்கள். எனக்கு எதிராக பயன்படுத்துங்கள். நான் தயாராக இருக்கிறேன். எனது வங்காள சகோதர சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதைக்காக எனது போராட்டத்தை தொடர்வேன்.

    இவ்வாறு கவர்னர் ஆனந்த போஸ் கூறியிருந்தார்.

    ஆனால் இளம்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தொழில்துறை மந்திரியுமான சஷி பஞ்சா கூறுகையில், 'இந்த பாலியல் குற்றச்சாட்டு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் கவர்னர் மாளிகைக்கு உள்ளேயே நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை' என்று கூறினார்.

    ஒரு கவர்னர் மீது இத்தகைய புகார் இதுவரை நடந்ததில்லை எனக்கூறிய பஞ்சா, இது நிச்சயமாக கவர்னர் பதவியின் மாண்பை இழிவுபடுத்துவதாகவும், இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே இளம்பெண் மீது தவறாக நடந்து கொண்டதற்காக கவர்னர் ஆனந்த போசுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கவர்னர் மாளிகையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் நேற்று (நேற்று முன்தினம்) வெளியே வந்து, கவர்னரின் பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன். அந்த பெண்ணின் கண்ணீர் என் நெஞ்சை நொறுக்கி விட்டது.

    கவர்னர் மாளிகையில் இனி வேலை செய்ய பயமாக இருப்பதாக கூறி அந்த பெண் அழுது கொண்டே வெளியே சென்றார். தான் அடிக்கடி அழைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

    பா.ஜனதாவினர் சந்தேஷ்காலி குறித்து பேசுவதற்கு முன், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண்ணிடம் கவர்னர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இவர்கள் தான் நம் தாய், சகோதரிகளின் மானம் பற்றி பேசுகிறார்களா?

    கவர்னர் மாளிகைக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    கவர்னர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×