search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு
    X

    பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிவு

    • மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
    • விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவை குறைந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளதாக தொழில்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக, நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 5-ல் 2 பங்காக டீசல் உள்ளது.

    இதன் விற்பனை, இம்மாதத்தின் முதல் பாதியில் 30 லட்சத்து 43 ஆயிரம் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீத சரிவு ஆகும்.

    அதேநேரம், விவசாயத்துக்கான எரிபொருள் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயிலை சமாளிக்க கார்களில் ஏ.சி. தொடர்ந்து இயக்கப்பட்டதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவீதமும், மே மாதத்தில் 9.3 சதவீதமும் டீசல் விற்பனை கூடியிருந்தது.

    பெட்ரோல் விற்பனையும் இந்த மாத முதல் பாதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட பெட்ரோல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீத சரிவு. மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த மார்ச் மாத 2-வது பாதியில் இருந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்து வந்திருக்கிறது. அதற்கு தொழில்துறை, விவசாயத்துறை செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைந்ததுதான் காரணம்.

    ஆனால் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை தணியத் துவங்கி இருக்கிறது. விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவையும் குறைந்திருக்கிறது.

    அதேவேளையில், நாட்டில் விமான பயணிகள் போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை நெருங்கியிருக்கும் சூழலில், விமான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் 1 முதல் 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விமான எரிபொருள் தேவை 2 லட்சத்து 90 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 2.6 சதவீத அதிகரிப்பு ஆகும்.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சமையல் எரிவாயு விற்பனை 1.3 சதவீதம் சரிந்து 10 லட்சத்து 14 ஆயிரம் டன்களாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×