search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    143 எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டன ஊர்வலம்
    X

    143 எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டன ஊர்வலம்

    • எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை ஜந்தர்மந்தரில் போராட்டம்.
    • நாடு தழுவிய போராட்டங்களும் நடத்தப்படும்.

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. நாளை வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    இதற்கிடையே பாராளுமன்ற பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டது. பாராளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 14 எம்.பி.க்கள் முதலில் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து 78 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட 49 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். நேற்று மேலும் 2 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். பதாகைகளை வைத்திருந்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுவரை பாராளுமன்றத்தில் 143 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் மட்டும் 97 பேர் சஸ்பெண்டு ஆகியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவரும், மேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினார்கள். பாராளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை கண்டன ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். 143 எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து அவர்கள் ஊர்வலமாக சென்றனர். விஜய் சவுக் நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைகளில் பதாகைகள் வைத்திருந்தனர்.

    அப்போது மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றம் செயல்படுவதை அரசு விரும்பவில்லை. பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சினையை எழுப்ப நாங்கள் விரும்பினோம். அது எப்படி நடந்தது. அதற்கு யார் பொறுப்பு?

    பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் அவையில் விளக்கம் அளித்து இருக்க வேண்டும். பிரதமர் வேறு இடத்தில் பேசினார். ஆனால் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. பாராளுமன்றத்துக்கு வராமல் அவர் ஓடுகிறார்.

    பாதுகாப்பு மீறல் குறித்து பேச அனுமதிக்குமாறு பாராளுமன்ற சபாநாயகர், மேல்சபை தலைவர் ஆகியோரிடம் நாங்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கிறார்கள்.

    எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை (வெள்ளிக் கிழமை) ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்துவார்கள். நாடு தழுவிய போராட்டங்களும் நடத்தப்படும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

    Next Story
    ×