search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதயாத்திரையால் எனக்கு பொறுமை அதிகரித்து விட்டது: ராகுல் காந்தி
    X

    பாதயாத்திரையால் எனக்கு பொறுமை அதிகரித்து விட்டது: ராகுல் காந்தி

    • மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது.
    • அசவுகரியத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்போதும் நல்லது.

    இந்தூர் :

    மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள இந்தூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பாதயாத்திரையில் மிகவும் திருப்தியான தருணம் குறித்து கேட்டதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-

    திருப்தியான தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால், என்னுள் ஏற்பட்ட சில சுவையான மாற்றங்கள் இருக்கின்றன. பாதயாத்திரையால் எனது பொறுமை கணிசமாக அதிகரித்து விட்டது. இரண்டாவது, 8 மணி நேரமானாலும் நான் எரிச்சல் அடைவது இல்லை. முன்பெல்லாம் 2 மணி நேரத்தில் எரிச்சல் அடைந்து விடுவேன். யாராவது தள்ளினாலும், இழுத்தாலும் என்னை பாதிப்பது இல்லை.

    மூன்றாவது, மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது. யாராவது என்னிடம் ஏதேனும் சொல்ல வந்தால், நன்றாக கேட்கிறேன். இவையெல்லாம் எனக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.

    நான் பாதயாத்திரையை தொடங்கியபோது, ஏற்கனவே குணமாகிவிட்ட ஒரு காயத்தால், முழங்காலில் வேதனை ஏற்பட்டது. அந்த நிலைமையில், என்னால் நடக்க முடியுமோ, முடியாதோ என்ற அச்சம் உருவானது. ஆனால், அந்த அச்சத்தை படிப்படியாக சமாளித்தேன். அசவுகரியத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்போதும் நல்லது.

    தென்மாநிலம் ஒன்றில் நான் நடைபயணத்தில் இருந்தபோது, வேதனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, 6 அல்லது 7 வயதுடைய ஒரு சிறுமி என்னிடம் வந்து ஒரு கடிதத்தை அளித்தாள்.

    அதை படித்து பார்த்தேன். ''நீங்கள் தனியாக நடப்பதாக கருதாதீர்கள். பெற்றோர் அனுமதிக்காததால், உங்களுடன் என்னால் நடக்க இயலாது. ஆயினும் நானும் நடப்பதாக கருதுகிறேன்'' என்று எழுதப்பட்டு இருந்தது.

    இதுபோல், ஆயிரக்கணக்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதுதான் முதலில் என் மனதில் வந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×