search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்லைனில் ரூ.70,000-க்கு விற்பனைக்கு வந்த நீட் வினாத்தாள் - புதிய சர்ச்சை
    X

    ஆன்லைனில் ரூ.70,000-க்கு விற்பனைக்கு வந்த நீட் வினாத்தாள் - புதிய சர்ச்சை

    • ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை.

    இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    குளறுபடி என்ற வார்த்தை வந்ததில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று அரசியல் கட்சி தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

    இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.

    அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.

    இதற்கிடையில் 'டெலிகிராம்' என்ற சமூகவலைதளப் பக்கத்தில் ''PG Neet leaked Materials'' என்ற குழுவில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் வேண்டுமா?, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வாங்க முன்வந்தால் ஒரு விலை எனவும், அதற்கு பிறகு வாங்கினால் வேறொரு விலை எனவும் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

    அதாவது, ஒரு வினாத்தாள் வாங்க ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனவும், குழுவில் உள்ளவர்கள் 60 சதவீதம் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இளநிலை 'நீட்' தேர்வு விவகாரத்துக்கு சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட்டு முற்றுப்புள்ளி வைத்து, அடுத்தகட்ட பாதைக்கு வழிகாட்டியது. இந்த சூழலில், தற்போது முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கிடைப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதுநிலை நீட் தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கணிசமான தொகைக்கு வினாத்தாள் வழங்குகிறோம் என முதுநிலை நீட் தேர்வு ஆர்வலர்களை சில வஞ்சகர்கள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசில் புகாரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் வழங்குவதாக சொல்லப்படும் டெலிகிராம் குழுவில் முதுநிலை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இருப்பதாக கூறி தவறான பாதைகளில் வழி நடத்த முயற்சி செய்கிறார்கள்.

    முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவு என்று பரவும் தகவல்கள் போலியானது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவது, உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது, பரப்புவதை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் சரியாக கையாளும்.

    தேர்வுக்கான வினாத்தாளை வழங்குவதாக ஏஜெண்டுகள், மோசடியாளர்கள் செல்போன் அழைப்பு, மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மூலம் அணுகினால் https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையும் அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×