search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் வேலைவாய்ப்பு முறையை சீரழித்து விட்டது: பா.ஜ.க. அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
    X

    அரியானாவில் வேலைவாய்ப்பு முறையை சீரழித்து விட்டது: பா.ஜ.க. அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

    • நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நீடித்து வருகிறது.
    • நாட்டின் வேலைவாய்ப்பு அமைப்பை பிரதமர் மோடி முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

    பா.ஜனதா ஆளும் அரியானாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் அரியானாவின் கர்னால் மாவட்டத்துக்கு உட்பட்ட அசாந்தில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்று பிரசாரம் செய்தார்.

    அப்போது மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரியானாவை ஆளும் பா.ஜனதா அரசு, மாநிலத்தை முற்றிலும் சீரழித்து விட்டது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் நீடித்து வருகிறது. நாட்டின் வேலைவாய்ப்பு அமைப்பை பிரதமர் மோடி முறைப்படி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

    சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது அரியானாவில் இருந்து அங்கே சென்ற சிலரை சந்தித்தேன். தங்கள் சொந்த மாநிலத்தில் தங்களுக்கான வேலை கிடைக்காததால், சிறந்த எதிர்காலத்துக்காக அமெரிக்கா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், 2 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்துள்ளோம். இதைத்தவிர பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 மற்றும் ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் போன்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    இந்த நாட்களில் பிரதமர் மோடியின் முகத்தை பார்த்தீர்களா? முன்பெல்லாம் தனக்கு 56 அங்குல மார்பு இருப்பதாக கூறி வந்த அவர், தற்போது கடவுளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.

    அவர் பீதியடைந்தார். அவர் நேரடியாக கடவுளிடம் பேசுவார் என்று நாட்டு மக்களிடம் கூறுகிறார். ஆனால் (லோக்சபா) தேர்தலில் கடவுள் அவருக்கு பாடம் கற்பித்தார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாஜக வேட்பாளரை சிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தோற்கடித்தார்.

    மோடி என்ன செய்கிறார்? உங்களிடம் உள்ள விவசாய நிலத்தை அதானிக்கு கொடுத்தார். ஹரியானா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது ஆனால் அவர் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார்

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய்பான், காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×