search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் கட்சி துருப்பிடித்துவிட்டது: பிரதமர் மோடி
    X

    காங்கிரஸ் கட்சி துருப்பிடித்துவிட்டது: பிரதமர் மோடி

    • காங்கிரஸ் கட்சியும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன.
    • வாய்ப்பு கிடைத்தால், மகளிர் மசோதாவை ஆதரிப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கும் என்பதை மறக்க வேண்டாம்.

    போபால்:

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம், மாநில தலைநகர் போபாலில் நடந்தது.

    அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். பா.ஜனதா தொண்டர்கள் நடத்திய யாத்திரை நிறைவு, ஜனசங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டும் இந்நிகழ்ச்சி நடந்தது.

    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பெண்கள் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியும், 'இந்தியா' கூட்டணியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன. பெண்சக்தியின் வலிமையை அவை புரிந்து கொண்டன.

    மேலும், மோடி வாக்குறுதி என்றால் 'உத்திரவாதம்' என்பதை புரிந்து வைத்துள்ளன. எனவே, நிர்பந்தத்தின் பேரிலும், தயக்கத்துடனும் மகளிர் மசோதாவை ஆதரித்தன.

    'இந்தியா' கூட்டணியை தொடங்கியவர்கள் யார்? முன்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்த அரசியல்வாதிகள் சேர்ந்துதான் அக்கூட்டணியை அமைத்துள்ளனர். மகளிர் மசோதாவை முன்பு கொண்டு வந்தபோது, அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை கிழித்தனர். சபாநாயகரை குறிவைத்து செயல்பட்டனர்.

    'இந்தியா' கூட்டணி கட்சிகள், பல்லாண்டு காலம் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தன. அப்போதே ஏன் மகளிர் மசோதாவை நிறைவேற்றவில்லை?

    வாய்ப்பு கிடைத்தால், மகளிர் மசோதாவை ஆதரிப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கும் என்பதை மறக்க வேண்டாம். வதந்தியை பரப்பி, பெண்களிடையே பிளவு ஏற்படுத்தும்.

    மத்தியபிரதேசத்தை நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தை பின்தங்கிய மாநிலமாக்கியது. மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அக்கட்சி மீண்டும் மத்தியபிரதேசத்தை பின்தங்கிய மாநிலம் ஆக்கிவிடும்.

    காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்ப கட்சி. கோடிக்கணக்கான ரூபாய் ஊழலையும், வறுமையையும், ஓட்டுவங்கி அரசியலையும் ஊக்குவித்தது. காங்கிரஸ் கட்சி துருப்பிடித்த இரும்பு போன்றது. மழையில் வைத்தால், அதன் கதை முடிந்து விடும்.

    வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைமக்களின் வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக தெரிகிறது. ஏழைகளின் குடிசைகளுக்கு செல்வதை சுற்றுலா போல் கருதுகிறார்கள்.

    ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு சென்று வீடியோ மற்றும் புகைப்பட படப்பிடிப்பு நடத்துகிறார்கள். முன்பும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏழைகளை இழிவுபடுத்தினர். காங்கிரஸ் கட்சி சிறிதுகூட மாறவில்லை.

    ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாக இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பா.ஜனதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில், 13 கோடியே 50 லட்சம் ஏழைகள், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    புதிய நாடாளுமன்றத்தையும் காங்கிரஸ் விமர்சிக்கிறது. நாட்டின் சாதனைகளை காங்கிரஸ் விரும்புவது இல்லை. எதிர்மறை தன்மையை பரப்பி வருகிறது.

    காங்கிரஸ் கட்சிக்குள் நகர்ப்புற நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிலவுகிறது. அடிமட்ட தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டு அமைதியாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×