search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிர் ரக விதைகளை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
    X

    அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிர் ரக விதைகளை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

    • அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிர் ரக விதைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
    • விவசாயிகள், ஆராய்ச்சியாளர்களுடன் உரையாடிய பிரதமர் விளைநிலங்களையும் பார்வையிட்டார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பருவநிலையைத் தாங்கி உயர் விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரக விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.

    இதில் 34 களப்பயிர்கள், 27 தோட்டப் பயிர்கள் உள்பட 109 ரகங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அப்போது விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தொடர்ந்து விளைநிலங்களையும் பார்வையிட்டார்.

    இன்று அறிமுகம் செய்யப்பட்ட 109 ரகங்களில் சிறுதானியங்கள், தீவனப்பயிர்கள், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், சணல், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்டவை அடங்கும்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீடித்த வேளாண்மை மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை பிரதமர் மோடி எப்போதும் ஊக்குவித்து வருகிறார். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க மதிய உணவு, அங்கன்வாடி போன்ற பல அரசு திட்டங்களுடன் உயிரி செறிவூட்டப்பட்ட பயிர் வகைகளை இணைப்பதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை உறுதிசெய்வதுடன், அவர்களுக்கு தொழில்முனைவுக்கான புதிய வழிகளை திறக்கும் என்று பிரதமர் கூறுகிறார். 109 உயர் விளைச்சல் ரகங்களை வெளியிடுவதற்கான இந்த நடவடிக்கை இந்தத் திசையில் மற்றொரு படியாகும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×