search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி 10-ம் தேதி வயநாடு பயணம்
    X

    பிரதமர் மோடி 10-ம் தேதி வயநாடு பயணம்

    • வயநாட்டில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 405-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுதினம் (சனிக்கிழமை) வயநாடு செல்கிறார். டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்படும் அவர், கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாட்டுக்கு சென்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.

    பின்னர் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    பிரதமரின் இந்த பயணத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் கண்ணூரில் இருந்து இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    பிரதமரின் பயணம் குறித்த தகவல்கள் கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×