search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜோதிடம் பார்த்து வங்கியில் கொள்ளைபோன நகையை மீட்ட போலீஸ்
    X

    ஜோதிடம் பார்த்து வங்கியில் கொள்ளைபோன நகையை மீட்ட போலீஸ்

    • பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் கேரள காவல் துறை பணியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளம் மூலமாக பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது நடந்த ருசிகர சம்பவம் குறித்து கூறியதாவது:-

    கண்ணூர் மாவட்டத்தில் இருட்டி என்ற இடத்திற்கு அருகே பூழக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கண்காணிப்பு கேமரா உள்பட தொழில் நுட்ப வசதி இல்லாத காலம் என்பதால், சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் கொள்ளை போன நகைகளை மீட்க முடியவில்லை. கொள்ளையர்கள் குறித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இதனிடையே, கொள்ளையர்களுக்கு போலீசார் உதவுவதாக கூறி பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து எந்த துப்பும் துலங்காததால் ஜோதிடத்தை நாட முடிவு செய்தேன்.

    இதற்காக பய்யனூரில் ஜோதிடர் வி.கே.பி.பொதுவால் என்பவரை ரகசியமாக சந்தித்து வங்கி கொள்ளை குறித்தும், அதுவரை நடந்த விசாரணை மற்றும் தொடர் விசாரணை தோல்வி குறித்தும் விளக்கினேன். அப்போது அவர், நகைகள் கொள்ளை போன வங்கி மேலாளரின் ஜாதகத்தை கொண்டு வரும்படி கூறினார்.

    அதனை பெற்று அவரிடம் கொடுத்தேன். அந்த ஜாதகத்தை படித்து பார்த்த ஜோதிடர், வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம், அதே வங்கியில் வேலை பார்த்து வரும் ஊழியரின் உதவியுடன் நடந்துள்ளது என கூறினார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கியில் இருந்து கிழக்கு திசையில் 4 கி.மீ தூரத்தில் சாலையோரம், 4 தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு கிணற்றினுள் போடப்பட்டுள்ளதாகவும் ஆணித்தரமாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து இரவோடு இரவாக அந்த பகுதிக்கு போலீஸ் படையுடன் சென்றோம். அங்கு ஜோதிடர் கூறியதை போல் தென்னை மரங்களுக்கு நடுவே ஒரு கிணறு இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பின்னர் அதில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வற்ற வைத்தோம்.

    இறுதியில் கிணற்றில் ஒரு இரும்பு பெட்டி (லாக்கர்) கிடந்தது. அதனை மீட்டு வெளியே கொண்டு வந்து திறந்து பார்த்த போது, கொள்ளை போனதாக கூறப்பட்ட 100 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்திருந்தது.

    பின்னர் நடத்திய விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் மற்றும் கொள்ளையர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த கொள்ளை வழக்கு தொடர்பான டைரி குறிப்பில், ஜோதிடம் பார்த்து கொள்ளையர்கள் பிடிபட்டதாக எழுதவில்லை. இவ்வாறு எழுதினால் சிரிப்பார்கள் என கருதி அந்த விவரத்தை எழுதவில்லை. ஆனால் ஜோதிடம் பார்த்து நகையை மீட்டது தான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×