search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் ராகுல் காந்தி பாத யாத்திரை: 119 கி.மீ. தொலைவுக்கு நடக்கிறார்
    X

    ஆந்திராவில் ராகுல் காந்தி பாத யாத்திரை: 119 கி.மீ. தொலைவுக்கு நடக்கிறார்

    • செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
    • 21-ந்தேதி வரை ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார்.

    கர்னூல் :

    நாட்டின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பாதயாத்திரை) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதியன்று, தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் யாத்திரையை முடித்து விட்டு கர்நாடக மாநிலத்தில் அவர் யாத்திரை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில், அவர் அங்கு பல்லாரி மாவட்டம், சங்கனகல்லு கிராமத்தில் வாக்கு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து நேற்று அவர் ஆந்திர மாநிலத்தில், அலுரு தொகுதியில் உள்ள ஹலாகார்வியில் பாத யாத்திரையைத் தொடங்கினார்.

    21-ந் தேதிவரை அவர் ஆந்திராவில் யாத்திரையை நடத்துகிறார். இந்த யாத்திரையில் அவர் 119 கி.மீ. தொலைவை கடக்கிறார்.

    நேற்று அவர் ஷேத்ரகுடியில் அனுமன் கோவிலுக்கு சென்று அங்கிருந்த யாத்திரையைத் தொடர்ந்தார்.

    ஆந்திர மாநிலத்தில் யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜாநாத், ரகுவீர ரெட்டி, தெலுங்கானாவின் நால்கொண்டா எம்.பி. உத்தம்குமார் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    ஆந்திராவில் 4 நாள் பாத யாத்திரைக்கு பின்னர் மீண்டும் கர்நாடகத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை நடத்த உள்ளார்.

    Next Story
    ×