search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானம்: இந்தியா பதிலடி
    X

    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானம்: இந்தியா பதிலடி

    • இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை குறித்து விவாதம்
    • மணிப்பூரில் அமைதி நிலவ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. ஆங்காங்கே வன்முறை வெடித்த வண்ணம் உள்ளது. இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் வன்முறை குறித்து பேசவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது.

    பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 'காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு' என இந்தியா சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்தியாவில் மனித உரிமை சூழ்நிலை குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக அதில் மணிப்பூர் வன்முறையை குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸ் ஸ்ட்ராஸ்போர்க்கில் இருக்கும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ''இன மற்றும் மத வன்முறையை நிறுத்துவதற்கும், அனைத்து மத சிறுபான்மையினரையும் பாதுகாப்பதற்கும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பதில் அளித்து கூறியதாவது:-

    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதித்ததையும், தீர்மானம் நிறைவேற்றியதையும் பார்த்தோம். இதுபோன்ற இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இது காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பாகும்.

    நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரிகளும் மணிப்பூரில் அமைதி நிலவ நடடிவக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை அதன் உள் பிரச்சினைகளில் அதிக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்துள்ளது. மெய்தி சமூகத்தினர் 53 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வசித்து வருகிறார்கள். நாகாஸ் மற்றும குகி சமூகத்தினர் 40 சதவீதம் பேர் மலை மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள்.

    மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் மணிப்பூர் மாநிலம் அமைதியின்றி காணப்படுகிறது.

    Next Story
    ×