search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன்- பிரதமர் மோடி வழங்கினார்
    X

    சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன்- பிரதமர் மோடி வழங்கினார்

    • திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர்.
    • நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தி லட்சாதிபதிகளாக்கும் 'லட்சாதிபதி சகோதரிகள்' எனப்படும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையும், அடுத்த 2 ஆண்டுகளில் அரசு உதவித்தொகையாக ரூ.12,500, வங்கிக் கடனாக ரூ.12,500-ம் வழங்கப்படும்.

    இந்த உதவித் தொகையை பெற, பெண்கள் தொடங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங், எல்.இ.டி. பல்புகள் தயாரிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியாவில் பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு அணுகுமுறை குறித்து கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதில் சுயஉதவிக் குழு பெண்களின் பங்களிப்பை பாராட்டினார்.

    சுய உதவிக் குழுவில் 10 லட்சம் பெண்கள் இணைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேளாண் தொழில்நுட்ப துறையின் புதியகொள்கையின் கீழ் டிரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி பிரதமர் மோடி இன்று காலை மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மராட்டிய மாநிலம் ஜல்கான் நகரில் லட்சாதிபதி சகோதரிகள் திட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று லட்சாதிபதி சகோதரிகளாக உயர்ந்த 11 லட்சம் பெண்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளிடம் அவர் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

    பின்னர் 4.3 லட்சம் சுய உதவி குழுக்களை சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழற்சி நிதியையும் அவர் வழங்கினார். மேலும் 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 25.8 லட்சம் பெண்களுக்கு ரூ.5,000 கோடி வங்கி கடனையும் பிரதமர் மோடி வழங்கினார்.

    அதன் பின்னர் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் 70-ம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    Next Story
    ×