search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடி...தமிழுக்கு ரூ.11¾ கோடி: பாராளுமன்றத்தில் கனிமொழி பேச்சு
    X

    சமஸ்கிருதத்துக்கு ரூ.198 கோடி...தமிழுக்கு ரூ.11¾ கோடி: பாராளுமன்றத்தில் கனிமொழி பேச்சு

    • பிரதமர் மோடி தமிழ் மொழியின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார்.
    • பாராளுமன்றம் கூடும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

    புதுடெல்லி

    ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது பாராளுமன்ற மக்களவையில் நேற்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் முன் மாதிரியாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அதில் தோற்றிருக்கிறீர்கள்.

    கடந்த 1967-ம் ஆண்டு எங்களது மூத்த முன்னோடி தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் மாநிலங்களவையில் பேசும்போது, 'கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிரான கருவிகளாக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறார்கள்' என்று பேசினார்.

    இப்போதும் கூட தமிழ்நாடு கவர்னர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுமார் 20 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் முக்கியமான சட்ட மசோதாவும் அதில் ஒன்று.

    தமிழ்நாடு மட்டும் இப்படி போராடிக்கொண்டிருக்கிறது என்றில்லை. மேற்கு வங்காளம், கேரளா, தெலுங்கானா, நாகாலாந்து என எங்கெல்லாம் பா.ஜ.க. அரசு இல்லையோ அங்கெல்லாம் மாநில கவர்னர்களோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கவர்னர்களிடம் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

    இந்த முறை பட்ஜெட்டில்கூட நீங்கள் திருவள்ளுவரை மறந்துவிட்டீர்கள், ஏனென்றால் இப்போது தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் எதுவும் இல்லை.

    பாராளுமன்றம் கூடும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. பாராளுமன்றம் செயல்படுவது என்பது ஏதோ அடையாளபூர்வமாக மாறிக்கொண்டிருக்கிறது. (அப்போது அருகே இருந்த தயாநிதி மாறன் குறுக்கிட்டு அந்த நாட்களிலும் பிரதமர் அவைக்கு வருவதில்லை என்றார்.)

    பிரதமர் மோடி தமிழ் மொழியின் உன்னதத்தைப் பற்றி அவ்வப்போது பேசுகிறார். ஆனால், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு 198.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்துக்கு 11.86 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த பணம் நிர்வாக செலவுகளுக்கே போதாது.

    அப்புறம் எங்கே ஆய்வு நடத்துவது? நிகழ்ச்சிகள் நடத்துவது? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாநில மொழிகளின் நிலை என்ன?.

    தமிழ்நாட்டில் கீழடியில் நடந்துள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி கி.மு. 600-க்கும் முற்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றை வெளியிடுவதில் கூட இந்த அரசு ஆர்வம் காட்டவில்லை. நிதி மந்திரி எங்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தளத்திலேயே அருங்காட்சியகம் 3 ஆண்டுகளில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்னும் அது நடக்கவில்லை.

    நீங்கள் மருத்துவ கல்லூரிகள் தொடங்கி இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 4 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் எந்த வேலையும் நடக்கவில்லை.

    இப்படி நீங்கள் தொடர்ந்து எங்களை அவமதித்தால், இந்த நாட்டு மக்கள் உங்களோடு இணைந்து நடக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×