search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனி பின்கோடு-முத்திரையுடன் ஆண்டுக்கு ஒருமுறை செயல்படும் சபரிமலை தபால் அலுவலகம்
    X

    தனி பின்கோடு-முத்திரையுடன் ஆண்டுக்கு ஒருமுறை செயல்படும் சபரிமலை தபால் அலுவலகம்

    • சபரிமலைக்கு தனி முத்திரை வழங்கப்பட்டு உள்ளது.
    • ஐயப்பன் பெயரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள் கடிதங்கள் வாயிலாக ஐயப்பனிடம் முறையிடுகிறார்கள்.

    சபரிமலை:

    இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செயல்படும் தபால் அலுவலகம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புரம் கோவில் அருகே இந்த தபால் நிலையம் செயல்படுகிறது.

    இந்த தபால் நிலையம் 1963-ம் ஆண்டு மண்டல பூஜை காலமான நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தபால் நிலையம் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் மட்டும் செயல்படுகிறது.

    தபால் அலுவலகங்களில் ஒரே மாதிரியான முத்திரை தான் பயன்படுத்தப்படும். ஆனால் சபரிமலைக்கு தனி முத்திரை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் தனி பின்கோடு எண்ணும் கொடுக்கப்பட்டு உள்ளது. 689713.

    சரி, இந்த தபால் நிலையத்துக்கு வரும் கடிதங்கள் எந்தெந்த பகுதிகளில் டெலிவரி செய்யப்படும்? அதற்கான தேவையே இல்லை. ஒரே ஒருவர் பெயருக்குத்தான் அத்தனை கடிதங்களும் வருகின்றன.

    அதாவது ஐயப்பன் பெயரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள் கடிதங்கள் வாயிலாக ஐயப்பனிடம் முறையிடுகிறார்கள். காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புகிறார்கள். இந்த தபால்களும், மணியார்டர் பணமும் ஐயப்பன் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.

    மேலும் சபரிமலை பிரசாதங்கள் இந்த தபால் நிலையம் மூலம் அனுப்பப்படுகிறது. தனித்துவ மிக்க சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதை புனிதமாக கருதுகிறார்கள்.

    ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் சபரிமலை யாத்திரை நினைவாக பக்தர்கள் வாங்கி செல்கிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு பிறகு இந்த தபால் நிலையம் மூடப்பட்டு விடும். முத்திரைகள் பம்பாவில் தனி அறையில் வைத்து பூட்டி பத்திரமாக பாதுகாக்கப்படும்.

    Next Story
    ×