search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை
    X

    76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை

    • செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது
    • பாதுகாப்பில் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள், டெல்லி போலீசார்

    நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில் முப்படை அணிவகுப்பை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்க விடப்படும். விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக டெல்லி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து 300 மீட்டருக்குள் துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்புப்படை, சிறப்புப் பாதுகாப்புக்குழு, மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் டெல்லி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    சுதந்திர தினத்தன்று டெல்லி விமான நிலையத்தில் திட்டமிடப்படாத விமானங்கள் புறப்படுவதற்கும் தரை இறங்குவதற்கும் சில மணி நேரம் தடைவிதிக்கப்படும். எனினும் வழக்கமாக செல்லும் விமானங்கள் புறப்பட எந்த பாதிப்பும் இருக்காது.

    இந்திய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை மற்றும் ராணுவ விமானப் படையின் ஹெலிகாப்டர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இது தவிர, கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகள் பயணம் செய்யும் மாநில ஹெலிகாப்டர்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டெல்லியில் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் பாராகிளைடிங் தடை செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    செங்கோட்டையின் வாயில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தற்காலிக கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பகின்றன. செங்கோட்டைப் பகுதியைச் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் தொலைநோக்கியுடன் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனிடையே பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறுநாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாடு சுதந்திர தின முக்கிய கருப்பொருளாக உள்ளது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. துணை ராணுவம் மற்றும் போலீசார் முக்கிய இடங்களில் ரோந்து சென்று வருகிறார்கள். ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

    டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க எல்லையில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிரதமருக்கான இடத்தில் அதிகாரி ஒருவர் நின்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். முப்படை வீரர்கள் மிடுக்குடன் அணி வகுத்துச் சென்றனர். இதையொட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    Next Story
    ×