search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    75 சதவீதமா? பெரும் கோடீசுவரர் விவாகரத்தில் புது திருப்பம்
    X

    75 சதவீதமா? பெரும் கோடீசுவரர் விவாகரத்தில் புது திருப்பம்

    • 32 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பதிவிட்டிருந்தார், கவுதம்
    • 7 நாட்களில் ரூ.1500 கோடி சந்தை மதிப்பை ரேமண்ட் குழுமம் இழந்துள்ளது

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர், கவுதம் சிங்கானியா (58).

    கவுதம் சிங்கானியா, பிரபல வழக்கறிஞர் நாடார் மோடி என்பவரின் மகள், நவாஸ் மோடி என்பவரை சுமார் 8 வருடங்கள் காதலித்து, பின் திருமணம் செய்து கொண்டார்.

    ஆனால், சிங்கானியா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக சில நாட்களுக்கு முன், தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "தங்கள் 32 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது" என கவுதம் சிங்கானியா பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து, கவுதம் சிங்கானியா தன்னை தாக்கி துன்புறுத்தியதாக அவர் மனைவி நவாஸ் மோடி குற்றம் சாட்டினார். இது குறித்து கேட்கப்பட்ட போது, "என் இரு மகள்களின் எதிர்காலம் மற்றும் என் குடும்ப நற்பெயர் காரணமாக எந்த கருத்தும் தெரிவிக்க போவதில்லை" என சிங்கானியா பதிலளித்தார்.

    இந்நிலையில், திருமண பந்தத்தை ரத்து செய்ய தனக்கும், தங்களின் இரு மகள்களின் எதிர்காலத்திற்கும், தீர்வு தொகை (settlement) என சிங்கானியாவின் நிகர சொத்து மதிப்பில் 75 சதவீதத்தை நவாஸ் மோடி கோரியுள்ளதாகவும், இரு தரப்பிற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சிங்கானியாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.12 ஆயிரம் கோடி ($1.4 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    யார் இந்த சிங்கானியா?

    1965 செப்டம்பர் 9 அன்று மார்வாரி தொழிலதிபர் குடும்பத்தில் விஜய்பத் சிங்கானியா-ஆஷாபாய் சிங்கானியா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர், கவுதம் சிங்கானியா.

    தங்கள் குடும்ப நிறுவனமான ஜேகே குழுமத்தில் (JK Group) 1986ல் பொறுப்பேற்ற கவுதம், 1990ல் ரேமண்ட் குழும (Raymond Group) நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். கவுதம், தனது குழுமத்தை எக்கு, சிமென்ட் உள்ளிட்ட பல துறைகளில் இருந்து விலக்கினார். பின், ஆண்களுக்கான உயர்ரக ஆடை வர்த்தகத்திலேயே கவனம் செலுத்த தொடங்கினார். தங்கள் வர்த்தகத்தை பல அயல்நாடுகளுக்கு கொண்டு சென்று பெரிய அளவில் விரிவாக்கம் செய்தவர், கவுதம்.

    இந்திய கோடீசுவர தொழிலதிபர்களில் முதன்மையான்வரான முகேஷ் அம்பானியின் பிரபல வசிப்பிடமான அன்டிலியா-வை (Antillia) விட உயரமாக, 30-தள வசிப்பிடம் ஒன்றை தற்போது கவுதம் கட்டி வருகிறார்.

    அதி வேகமாக செல்லும் கார்கள், சொகுசு படகுகள் மற்றும் விமானங்களில் மிகுந்த நாட்டமுடைய கவுதம் சில அதி வேக கார் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பல உயர்ரக கார்கள், படகுகள் மட்டுமின்றி பம்பார்டியர் (Bombardier) ஜெட் விமானமும் 3 ஹெலிகாப்டர்களும் கவுதம் தனது வாகன சேகரிப்பில் வைத்துள்ளார்.

    பங்கு சந்தையில், நவம்பர் 22 நிலவரப்படி ரேமண்ட் பங்கு, ரூ.1671 எனும் அளவில் வர்த்தகமாகி வந்தது. பங்கு சந்தையின் கடந்த 7 வேலை நாட்களில் இந்நிறுவனம் ரூ.1500 கோடி சந்தை மதிப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    1925ல் தொடங்கப்பட்டது உயர் ரக கோட், சூட் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆடைகள் உற்பத்தி நிறுவனமான ரேமண்ட் குழுமம் (Raymond Group). ஆடை துறை மட்டுமின்றி பொறியியல், விமானத்துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

    கவுதமின் உழைப்பு, திட்டமிடல் மற்றும் துணிச்சலான முடிவுகளால் அவரது நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆடை விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×