search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி பற்றிய ராகுல் பேச்சில் சில பகுதிகள் சபைக்குறிப்பில் இருந்து நீக்கம்
    X

    அதானி பற்றிய ராகுல் பேச்சில் சில பகுதிகள் சபைக்குறிப்பில் இருந்து நீக்கம்

    • ஜனநாயகம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
    • ராகுல் காந்தியின் குடும்பம்தான் ஊழலில் தொடர்புடையது

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

    அப்போது அவர் அதானி பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக "2014-ம் ஆண்டில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், கவுதம் அதானியின் சொத்துக்கள் உயர்ந்தது எப்படி? உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்த அதானி 2-வது இடத்துக்கு வந்தது எப்படி? " என கேட்டார்.

    அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான தொடர்புகள் பற்றியும் அவர் சில கருத்துக்களை தெரிவித்தார்.

    இதை அப்போதே சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கண்டித்ததுடன், " ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைத் தர வேண்டும்" என்று கூறினார்.

    இந்த நிலையில் மக்களவை நேற்று கூடியதும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, ராகுல் காந்தியின் மக்களவை பேச்சு விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற விதிகள்படி, ஒருவர் மற்றொருவர் மீது குற்றச்சாட்டு கூற விரும்பினால் அது குறித்து முன்கூட்டியே சபைக்கு நோட்டீஸ் தர வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சில கருத்துகளை கூறினார். அவை மிகவும் ஆட்சேபத்துக்கு உரியவை, அடிப்படையற்றவை. அவற்றை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், அவர்மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

    அவருடைய கருத்துக்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவோம். இதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவையில் முன்னாள் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தும் ராகுல் காந்தி பிரச்சினையை எழுப்பினார். "ராகுல் காந்தியின் குடும்பம்தான் ஊழலில் தொடர்புடையது, அவர்கள்தான் ஜாமீனில் வெளியே உள்ளனர், ஆனால் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்" என சாடினார்.

    மேலும், "இந்திய தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் ராகுல் காந்திக்கு பிரச்சினை இருக்கிறது. மோடி அரசில் விஷயங்கள் மாறி விட்டன. தொழில் அதிபர்கள் நேர்மையாக வளர்கிறார்கள். கமிஷன்கள், பேரங்கள் இல்லை. எனவே காங்கிரசுக்கு பிரச்சினை இருக்கிறது" எனவும் குறிப்பிட்டார்.

    ஆனால் ராகுல் காந்தியின் பேச்சில் ஆட்சேபத்துக்குரிய குறிப்பிட்ட சில பகுதிகள் சபைக்குறிப்பில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    அதானியின் மாபெரும் ஊழல் தொடர்பான பிரதமர் குறித்த சில கருத்துக்களை (சபைக்குறிப்பில் இருந்து) நீக்கி உள்ளனர். இதன் மூலம் மக்களவையில் ஜனநாயகம் தகனம் செய்யப்பட்டு விட்டது. ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×