search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சிவசேனாவிடம் இருந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றுங்கள்:அமித்ஷா கட்டளை
    X

    மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் பவன்குலே, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற காட்சி.

    சிவசேனாவிடம் இருந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றுங்கள்:அமித்ஷா கட்டளை

    • மும்பையில் உள்ள லால்பாக்ராஜா மண்டலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார்.
    • தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது.

    மும்பை

    2014 சட்டசபை தேர்தலில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உடைந்தது. 2 கட்சிகளும் தேர்தலை தனித்தனியாக சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா 120 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.

    இருப்பினும் 2017-ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தனித்தனியாக சந்தித்தன. இந்த தேர்தலிலும் பா.ஜனதா 82 இடங்களில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் 2 இடங்களில் (84 இடங்கள்) கூடுதலாக வெற்றி பெற்ற சிவசேனாவுக்கு மாநகராட்சியை விட்டு கொடுத்தது.

    இந்தநிலையில் 2019 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவி போட்டியில் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.

    எதிர்பாராத திருப்பமாக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே, 39 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார்.

    இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று மும்பை வந்தார். அவர் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்ராஜா மண்டலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதேபோல மலபார்ஹில் பகுதியில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு பங்களா, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு பங்களாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் வழிபட்டார். பாந்திரா பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதியையும் தரிசித்தார்.

    பின்னர் அவர் மும்பையை சேர்ந்த பா.ஜனதா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். இதில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை தலைவர் ஆஷிஸ் செலார், தேசிய நிர்வாகி வினோத் தாவ்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மும்பை மாநகராட்சியில் சுமார் 30 ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் சிவசேனாவிடம் இருந்து தட்டிப்பறிக்க வியூகம் வகுப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்தது.

    கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:-

    நீங்கள் ஒருவரை வேறு இடத்தில் அடித்தால் அவருக்கு வலிக்காது. ஆனால் அவரை அவரது சொந்த இடத்தில் அடிக்கும் போது, அந்த வலி ஆழமாக இருக்கும். எனவே சிவசேனாவின் சொந்த மைதானத்தில் (மும்பை மாநகராட்சி), அந்த கட்சிக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பா.ஜனதா மும்பை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை எனில், நாம் மராட்டியத்தை வெல்ல முடியாது. தற்போது உண்மையான சிவசேனா நம்முடன் உள்ளது. எனவே உத்தவ் தாக்கரேக்கு அவருக்கான இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    நீங்கள் (உத்தவ் தாக்கரே) பிரதமர் மோடி மற்றும் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பெயரை சொல்லி ஓட்டு கேட்டீர்கள். ஆனால் உங்களுக்கு பேராசை வந்தவுடன் சரத்பவாருடன் உட்கார்ந்து கொண்டீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் தேசியவாத காங்கிரசை எதிர்த்து வந்தீர்கள். ஆனால் முதல்-மந்திரி பதவிக்காக நீங்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சமரசம் செய்து கொண்டீர்கள்.

    ஒருவர் அநீதியை பொறுத்து கொள்ளலாம். ஆனால் துரோகத்தை பொறுத்துகொள்ள கூடாது. துரோகம், கொள்கையை விட்டு கொடுத்தற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு, அவர்களுக்குரிய இடத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×