search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் ராமநவமி விழாவில் கோவில் கிணற்று சுவர் இடிந்ததில் 35 பக்தர்கள் பலி
    X

    மத்திய பிரதேசத்தில் ராமநவமி விழாவில் கோவில் கிணற்று சுவர் இடிந்ததில் 35 பக்தர்கள் பலி

    • 40 அடி ஆழ கிணற்றுக்குள் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மேலும் பலர் கிணற்றின் பக்க சுவர்களில் மோதி படுகாயம் அடைந்தனர்.
    • மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இந்தூர் பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சுமார் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மீது காங்கிரீட் சிலாப்போட்டு மூடப்பட்டு உள்ளது. அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்வார்கள்.

    நேற்று ராமநவமி விழா என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த சிலாப் வழியாக நடந்து சென்றனர்.

    நேற்று பகல் 12.30 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் சிலாப் மீது நடந்து சென்றனர். இதில் பாரம் தாங்காமல் அந்த சிலாப் திடீரென உடைந்தது. அப்போது சிலாப் மீது நின்ற பக்தர்கள் அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

    40 அடி ஆழ கிணற்றுக்குள் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மேலும் பலர் கிணற்றின் பக்க சுவர்களில் மோதி படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இந்தூர் மேயர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பக்தர்கள் பலர் தலையில் அடிப்பட்டும், மூச்சு திணறியும் மயங்கி கிடந்தனர். அவர்களை பரிசோதித்த போது பலர் இறந்திருப்பது தெரியவந்தது.

    இந்த விபத்தில் நேற்று வரை 13 பக்தர்கள் இறந்ததாக கூறப்பட்டது. அதன்பின்பும் கிணற்றுக்குள் பக்தர்கள் பலர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அவர்களை மீட்க ராணுவத்தினரும்,பேரிடர் மீட்பு குழுவினரும் வந்தனர். அவர்கள் விடிய, விடிய கிணற்றுக்குள் கிடந்தவர்களை மீட்டனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இன்னும் பலர் கிணற்றுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    அவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இப்பணி முடிவடையும் போது பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது. இதற்கிடையே காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 16 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் கிணற்று சுவர் இடிந்து 35 பக்தர்கள் பலியான தகவல் அறிந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

    அதில் இந்தூரில் நடந்த விபத்து பற்றி அறிந்ததும் நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தூரில் நடந்த விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இது பற்றி மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்றார்.

    மத்திய பிரதேச முதல் -மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இந்தூர் பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.

    மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இதுபோல காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    Next Story
    ×