search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    X

    இரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    • ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
    • இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை கிடைக்க அவர் இடைவிடாமல் போராடினார்.

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து கொழும்பில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

    இரா.சம்பந்தன், இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் திகழ்ந்து வந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். 6 முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

    இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான போரின் போது தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர். இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வசிக்க வேண்டும் என்று விரும்பினார்.

    இரா.சம்பந்தன் மறைவுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான், சரத் பொன்சேகா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் நினைவு கூரப்படும். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை கிடைக்க அவர் இடைவிடாமல் போராடினார்.

    இலங்கை மற்றும் இந்தியாவில் அவரை பின்தொடர்வோர் சம்பந்தனை இழந்து தவிப்பார்கள் என கூறியுள்ளார்.

    Next Story
    ×