search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு- மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு உத்தரவு
    X

    வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு- மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு உத்தரவு

    • விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
    • லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அமித் தன்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இதுகுறித்து, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் கூறும்போது, "பிரிஜ்பூஷனின் பாலியல் தொல்லைக்கு குறைந்தது 10 முதல் 12 வீராங்கனைகள் உள்ளாகி இருக்கிறார்கள். இதை அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் விவரத்தை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது தெரிப்பேன்" என்றார்.

    ஆனால் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

    இது தொடர்பாக விளையாட்டு அமைச்கம் தரப்பில் கூறும்போது, "இவ்விவகாரம் விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தையும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க தவறினால் தேசிய விளையாட்டு மேம்பாட்டு குறியீடு 2011 விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் பயிற்சியாளர்கள் மீது வீராங்கனைகள் அளித்த புகார்களின் நகலையும், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களையும் வருகிற 21ம் தேதிக்குள் கேட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு போலீசை மகளிர் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பிரிஜ்பூஷன் ஷரன்சிங் பாரதீய ஜனதா எம்.பி. ஆவார்.

    Next Story
    ×