search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குவாலியர் அரண்மனையில் அற்புதமான உணவு அனுபவம்
    X

    குவாலியர் அரண்மனையில் அற்புதமான உணவு அனுபவம்

    • மேஜையானது அதிநவீன கண்ணாடி ஸ்டாண்டுகள் மற்றும் பிற சுவையான உணவு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
    • அரண்மனையில் உள்ள சாப்பாட்டு அறையில் விருந்துகளின் போது சுமார் 150 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது.

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரண்மனையில் அற்புதமான உணவு அனுபவத்தை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் ஆர்.ஜி.பி. குழும தலைவரான ஹர்ஷ்கோயங்கா பகிர்ந்துள்ள வீடியோவில் அரண்மனையில் விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறுவதற்காக உள்ள மிகப்பெரிய மேஜையில் வெள்ளி பொம்மை ரெயில் சுற்றி வரும் காட்சிகள் உள்ளது.

    அதில், விலை உயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் உலர் பழங்கள் எடுத்து செல்லப்படுகிறது. மேஜையில் அமர்ந்திருக்கும் விருந்தினர்களுக்கு அந்த பொம்மை ரெயில் மூலம் விருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக உள்ளது. 'சிந்தியா' என்று பெயரிடப்பட்ட இந்த மினியேச்சர் ரெயில் மூலம் உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பரிமாறப்படும் காட்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது.

    மேஜையானது அதிநவீன கண்ணாடி ஸ்டாண்டுகள் மற்றும் பிற சுவையான உணவு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அரண்மனையில் உள்ள சாப்பாட்டு அறையில் விருந்துகளின் போது சுமார் 150 விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது. இங்கு சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு என்று தனித்தனியாக பிரிவுகள் உள்ளன.

    இணையத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ 3.79 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதனைப்பார்த்த பயனர்கள் பலரும் அரண்மனைக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×