search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடையுத்தரவு 6 மாதங்களில் தானாக ரத்தாவது செல்லாது - உச்ச நீதிமன்றம்
    X

    "தடையுத்தரவு 6 மாதங்களில் தானாக ரத்தாவது செல்லாது" - உச்ச நீதிமன்றம்

    • 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் தடை 6 மாதத்தில் காலாவதி ஆகி விடும் என தீர்ப்பளித்தது
    • காலதாமதம் நடைமுறை சிக்கல்களாலும் ஏற்படலாம் என இன்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது

    கடந்த வருடம், ஏசியன் ரீசர்ஃபேசிங் ஆஃப் ரோட் ஏஜென்சி (Asian Resurfacing of Road Agency) எனும் நிறுவனத்தின் இயக்குனருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கும் (CBI) இடையே நடைபெற்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இவ்வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், உயர் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் வழங்கும் "இடைக்கால தடை உத்தரவு" (interim stay) என்பது 6 மாதங்கள் கடந்தததும் - பிரத்யேகமாக நீதிமன்றத்தாலேயே நீட்டிக்கப்படாத நிலையில் - தானாக செயலற்றதாகி விடும் என கடந்த 2018 டிசம்பர் 1 அன்று தீர்ப்பளித்தது.

    இதன் விளைவாக, விசாரணை அமைப்புகளுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பெற்றவர்கள், 6 மாத காலகட்டத்திற்கு பிறகு எந்த விசாரணை அல்லது அதிகாரபூர்வ நடவடிக்கைகளை அந்த அமைப்புகள் நிறுத்தி வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது எனும் நிலை ஏற்பட்டது.

    இந்த தீர்ப்பு குறித்தான மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை (ஏ.எஸ்.ஓகா, ஜே.பி.பர்திவாலா, பங்கஜ் மிதால் மற்றும் மனோஜ் மிஸ்ரா) கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அந்த தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக தெரிவித்து இன்று அதனை ரத்து செய்தது.

    இது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தெரிவித்ததாவது:

    ஒரு நபருக்கோ, அல்லது நிறுவனத்திற்கோ, அல்லது அமைப்பிற்கோ எதிராக விசாரணை அல்லது நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, அது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், வழக்கு விசாரணை முடியும் வரை அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிறப்பிக்கும் தடையுத்தரவு காலவரையற்றதாக இருந்து, தொடர வேண்டிய வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நீடித்து கொண்டே சென்றால், நியாயமான சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை தொடர்வதிலும், தங்கள் கடமையை செய்வதிலும், அதிகார மையங்களுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கிறோம்.

    ஆனால், நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஏற்படும் பெரும்பாலான காலதாமதங்கள், வழக்கை எடுத்து கொள்வதில் ஏற்படும் தாமதம், நீதிமன்ற விடுமுறை போன்ற பல காரணங்களை உள்ளடக்கியது.

    எனவே, 6 மாதத்தில் தடையுத்தரவு தானாக காலாவதியாகி விடும் என்பது அந்த உத்தரவை போராடி பெற்ற மனுதாரர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகலாம்.

    எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம்.

    இவ்வாறு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விளக்கம் அளித்தது.

    Next Story
    ×