search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்காளம்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் தடியடி
    X

    மேற்கு வங்காளம்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் தடியடி

    • தேர்தல் வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோர் பலி
    • 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது

    மேற்கு வங்காளத்தில் கடந்த 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறை வெடித்தது. வாக்குப்பெட்டிகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் தாக்கப்பட்டனர். பல்வேறு கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டனர். தேர்தல் வன்முறையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வன்முறை நடைபெற்ற 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுதேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப்படை வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொண்டர்கள் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு முன் கும்பலாக திரண்டனர்.

    ஹவுராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியே கூடியிருந்த கும்பல் திடீரென வாக்கு மையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த கும்பல் கேட்காததால், பாதுகாப்புப்படையினர் தடியடி நடத்த தொடங்கினர். பின்னர், கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    3 அடுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் 73,887 இடங்ளிலும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஊராட்சி வார்டுகள் 63,229 ஒன்றிய வார்டுகள் 9730, மாவட்ட ஊராட்சி வார்டுகள் 928 ஆகும். இந்த தேர்தலில் 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவின்போது சுமார் 65,000 மத்திய காவல் படையினர், மாநில காவல் துறையை சேர்ந்த 70,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Next Story
    ×