search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வழக்குப்பதிய போலீஸ் தாமதித்தது ஏன்? பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
    X

    வழக்குப்பதிய போலீஸ் தாமதித்தது ஏன்? பெண் மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

    • இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.
    • இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார்.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கால்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதிகள் காவல்துறை மீது அரசு மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    'பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுப் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட 3 மணி நேரம் கழித்தே போலீசாரால் எப்.ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு காரணம் என்ன?

    இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார். தற்கொலை நாடகமாட ஏற்பாடு செய்து ஜோடித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. டாக்டரின் உடலை பார்க்க அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

    கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார். முதல் தகவல் அறிக்கையில் கல்லூரி முதல்வர் பெயர் இடம் பெறாதது ஏன்?

    ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரிக்குள் ஆயிரக்கணக்கான கும்பல் எப்படி நுழைந்தது? போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது. போலீசாருக்கு தெரியாமல் 7 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் எப்படி நுழைய முடியும்?

    டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மேற்கு வங்காள அரசு தவறிவிட்டது. பெண் டாக்டரின் பெயர் ஊடகங்கள் முழுவதும் வெளியிடப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டம் தடை செய்கிறது. உயிரை இழந்த மருத்துவருக்கு இப்படித்தான் கவுரவம் வழங்குகிறோமா?

    பெண்ணின் அடையாளம் வெளியே தெரிந்தது எப்படி? பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு இன்னொரு கற்பழிப்பு சம்பவத்துக்காகக் காத்திருக்க முடியாது.

    இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

    Next Story
    ×