search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் புதுவையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை செல்லும் பாதைகளை பொதுப்பணித் துறையினர் சுத்தம் செய்து புதிய 'மேன்ஹோல்'களை அமைத்தனர்.

    இந்த நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த பகுதிக்கு விரைந்தனர்.

    கம்பன் நகர், 3-வது குறுக்கு தெரு முதல், 7-வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை செல்லும் மேன்ஹோல்களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:-

    வீடுகளில் சமையல் கியாஸ் போன்ற வித்தியாசமான வாசனை வருவதாக தகவல் வந்தது. ஆய்வு செய்தபோது, மீத்தேன் வாயுவின் வாசனை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளிவரும்.

    அதனால், உயிருக்கு எந்த பாதிப்பும் வராது. இந்த வாயு குப்பைகள் மற்றும் சாக்கடைகள் மூலமும் வரக்கூடும். பொதுவாக ஹைட்ரஜன் சல்பேட், கார்பன் மோனக்சைடு வாயுவால் மட்டும் பாதிப்பு வரும். இப்போது குடியிருப்பு பகுதிகளில் அந்த வாயுக்கள் வெளிவரவில்லை.

    இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    • மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 59 போ் உயிாிழந்தனா்.

    இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் (வயது 39) என்பவா் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதனால் இச்சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 60 ஆக உயா்ந்துள்ளது.

    மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கள்ளக்குறிச்சி மெத்தனால் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரித்து வருகிறது.
    • முழு விசாரணைக்கு பின் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தெரிவிக்கப்படும்.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு காரணமான மெத்தனால், புதுச்சேரியில் இருந்து வரப்பட்டதாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இக்குற்றச்சாட்டை தொடர்ந்து, புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை தடுக்க கலால் சாவடிகள் அமைக்கப்படுமா? என உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மெத்தனால் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரித்து வருகிறது.

    இதில் மாறுபட்ட கருத்துகளும் புது தகவல்களும் வந்து கொண்டுள்ளது. முழு விசாரணைக்கு பின் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது தெரிவிக்கப்படும்.

    இந்த வழக்கில் மாதேஷ் புதுச்சேரியில் பிடிபட்டுள்ளார். அவருக்கு பல இடங்களில் முகவரி சான்று உள்ளது. அவரை புதுச்சேரியில் பிடித்ததால் இங்கிருந்து வந்ததாக கூறுகின்றனர்.

    தற்போது மரக்காணத்தில் ஒருவரை பிடித்துள்ளனர். கலால், போலீஸ் மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி அரசே மதுக்கடைகளை ஏலம் விட்டு முறைப்படி நடத்துவதால், இங்கு கள்ளச்சாராயத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் தான் கள்ளச்சாராயம் உள்ளது. புதுச்சேரியில் கலால் சாவடிகள் அமைக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும்.
    • மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் சாவுக்கு காரணமான தமிழக தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்தும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணாசிலை அருகில் இன்று நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    தமிழகம் முழுவதும் கள்ளசாராய விற்பனை அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது. ஆளும் திமுக அரசின் ஆதரவோடு விற்பனை செய்யப்படுவதால் பல இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர்.

    இந்த துயர சம்பவத்திற்கு தமிழக தி.மு.க. முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் சாராயத்தில் கலக்கப்பட்டதால் அதனை அருந்திய பலர் மரணமடைந்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கு தமிழக தொழில்துறை, கலால்துறை, காவல்துறை அமைச்சர்கள பொறுபேற்க வேண்டும். ஆனால் அதை விடுத்து தமிழக முதலமைச்சர், இந்த சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், ஆந்திராவில் இருந்து தொழில்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்ட மெத்தனால் என்றும் சட்டமன்றத்தில் உண்மையை மூடி மறைக்கும் விதத்தில் ஆதராமற்ற குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த சம்பவத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறுவது உண்மை என்றால் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். மனதை உலுக்கும் இந்த சட்டவிரோத சம்பவத்தை தமிழக சி.பி.சி.ஐ.டி.யே விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்..?

    அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியினுடைய தேசிய தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர்களும், தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கி தி.மு.க. அரசுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர்.

    • நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது.
    • குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்தும் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது. பீகாரில் நீட் தேர்வு கேள்வி தாள்களை கசியவிட்டு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் பலதரப்பட்ட ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு முகமை தான் இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணம்.

    நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தேர்வும் முறையாக நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சம்பந்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிறது. மோடி ஆட்சியில், ஒட்டுமொத்தமாக அரசு நடத்தும் தேர்வுகள் மோசமாக கையாளப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்தது இல்லை. மோடி ஆட்சியில் சர்வசாதாரணமாக முறைகேடுகள் நடக்கிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இது சகஜமாக நடக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வெடிகுண்டு வீசப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை.
    • வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே உள்ளது.

    கேரளா மாநில அரசியலின் தாக்கம் மாகியில் எதிரொலிக்கும். மாகியில் கம்யூனிஸ்டுகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்பையொட்டி மாகி பிராந்திய பாஜகவினர் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

    போலீசார் அனுமதிக்காத பகுதிக்கு ஊர்வலமாக சென்ற பாஜகவினர் கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு இருந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக மாகி நகரம் குறிச்சி பகுதியில் வசிக்கும் பா.ஜனதா தொண்டர் சனூப் என்பவரின் வீட்டினுள் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் வீட்டின் ஜன்னல், டிவி போன்றவை வெடித்து சிதறின. வெடிகுண்டு வீசப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை.

    இந்த நிலையில் மாகியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்படுவதை தடுக்க செருகல்லை, சாலக்கார பள்ளூர், தன்னாபிலகுல், கிழக்கு பள்ளூர், செம்பிரா, மேற்கு பள்ளூர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    கண்ணூர் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜியாசின் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாய் லக்சியுடன் சோதனை நடத்தினர்.

    மாகி போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் நடந்த சோதனையில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அஜய்குமார், ரெனில் குமார், பிரதீப் ஆகியோர் ஆளில்லாத வீடுகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், புதர்கள் என சமூக விரோதிகள் நடமாடும் பகுதிகளில் சோதனை செய்தனர்.

    வரும் நாட்களிலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்தார்.

    • 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.
    • மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    புதுச்சேரி:

    சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கடற்கரை சாலையில் யோகாவில் உலக சாதனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஐஸ் கட்டி மீது அமர்ந்து சுமார் 2 மணி நேரம் யோகாசனம் செய்தல், ஆணியின் மீது படுத்து யோகாசனம் செய்தல், ரூபி க்யூப் செய்து கொண்டே யோகாசனம் செய்தல், பானையின் மீது படுத்து யோகாசனம் செய்தல், பந்துகள் மீது படுத்து யோகா சனம் என 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.

    நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    மாணவர்களுக்கு நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில் யோகா நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு உலக சாதனை புரிய வேண்டும் என்பதற்காக ஆணிகள் மீதுப்படுத்தும் பந்துகள் பானைகள் மீது யோகா செய்தும் ஐஸ்கட்டிகள் மீது அமர்ந்து யோகா செய்து மாணவ- மாணவிகள் அசத்தினர்கள்.

    மாணவர்கள் தங்களது மனதை ஒருநிலைப்படுத்தி நினைவு ஆற்றலை அதிகப்படுத்த இத்தகைய யோகா சனங்கள் உதவும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
    • 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.
    • போலீசார் விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அனிதா நகரை சேர்ந்த பிரபல தாதா கர்ணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்தார்.

    நன்னடத்தை விதிப்படி தனக்கு விடுதலை கோரி கர்ணா மனுத்தாக்கல் செய்தார். அதை புதுவை அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில் அவர் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோலுக்கு விண்ணப் பித்தார். ஏற்கனவே பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.

    அதன்படி கடந்த 13-ந் தேதி மீண்டும் சிறைக்கு வர வேண்டிய கர்ணா திரும்பாததையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தேடப்படும் குற்றவாளியாக புதுவை காவல்துறை அறிவித்தது.

    இந்த நிலையில் அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமான 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே முதலியார்பேட்டை அனிதாநகரில் உள்ள கருணாவின் பூட்டிய வீட்டை கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனையிட்டனர்.

    கர்ணாவின் நெருங்கிய கூட்டாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கோவையில் இருந்த ரவுடி கர்ணாவை புதுச்சேரி சிறப்பு படை போலீசார் தலைமறைவான 4 நாட்களுக்கு பிறகு கைது செய்தனர். தொடர்ந்து கர்ணாவை இன்று அதிகாலை புதுச்சேரிக்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

    தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும்.
    • தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இன்று மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அ.தி.மு.க.வினர் தங்கள் கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டிக் கொண்டும், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 முறை மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தோடு, அபராத கட்டணம், நிலை கட்டணம், மின்விலை ஈடுகட்டுவதற்கான கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் என்ற தலைப்புகளிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறது.

    மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி எதிர்காலத்தில் தனியாருக்கு மின்துறையை தாரை வார்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கவர்னர் இப்பிரச்சினையில் தலையிட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமளா, மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
    • இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.

    பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    • திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
    • அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளு மன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

    அதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் நேற்று அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.

    மதியம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ. தனித்தனியாக கவர்னரை சந்தித்துபேசினர்.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கேட்ட போது தொகுதியில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.

    ×