search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • வங்காளதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி ராவல்பிண்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வங்கதேச அணி மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

    அதேசமயம் தொடரில் இருந்து விலகியுள்ள மஹ்முதுல் ஹசன் ஜாயிற்கு பதிலாக மாற்று வீரராக யாரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

    வங்கதேச டெஸ்ட் அணி:

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணி:

    ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

    • மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    • சமித் டிராவிட்டின் அந்த சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூர்:

    கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மகாராஜா டி20 கிரிக்கெட் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான இவரை வாங்க சில அணிகள் விருப்பப்பட்டாலும், மைசூர் வாரியர்ஸ் அணி முந்திக் கொண்டது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து மைசூர் வாரியர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மைசூர் வாரியர்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மனோஜ் பண்டாகே 33 பந்துகளில் 58 ரன்களை விளாசினார்.

    இதன்பின் களமிறங்கிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய புவன் ராஜு 24 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இந்த போட்டியில் முதலில் ஆடிய மைசூர் அணியில் இடம் பெற்ற ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் 7 ரன்னில் அவுட் ஆனார். அதில் ஒரு சிக்சரை அபாரமாக விளாசி அசத்தினார்.


    சமித் டிராவிட்டின் அந்த சிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவீன் வீசிய பந்தில் அபாரமாக புல் ஷாட் மூலமாக டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை அடித்தார். ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் முதல் போட்டியிலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலமாக சமித் டிராவிட்டுக்கு ஐபிஎல் தொடருக்கான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது.
    • தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது.

    மும்பை:

    இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பெரிய பங்கை சர்பராஸ் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்பராஸ் கான் உடல் பருமனாக இருப்பதாக அவரை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    இதனால் தனது உடல் எடையை குறைக்க சர்பராஸ் கான் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் கூட சர்பராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் ஆறு மாதம் காலம் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். எனினும் தனது உடல் எடை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டை பொறுத்தவரை எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். எழுந்தவுடன் ஓடி பயிற்சி மேற்கொள்வேன்.

    தொடர்ந்து ஓடுவதன் மூலம் என்னுடைய உடல் தகுதி அதிகரிக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் ஓடிய பிறகு என்னால் அரை மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓட முடிகிறது.

    ஓடி முடித்த பிறகு தான் ஜிம்மில் இணைந்து பல்வேறு பயிற்சிகளை செய்கிறேன், பேட்டிங் வலை பயிற்சியை மாலை நேரத்தில் வைத்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு சர்பராஸ்கான் கூறினார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களுக்கு சுருண்டது.

    கயானா:

    தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    டிரினிடாடில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேன் பிட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பெடிங்காம் 28 ரன்னும், ஸ்டப்ஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமாரி ஜோசப் 5 விக்கெட்டும், ஜேய்டன் சீலஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களுக்கு சுருண்டது. ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, 16 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மார்க்ரம் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். சோர்சி 39 ரன் எடுத்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்துள்ளது. கைல் வெர்ரின்னே 50 ரன்னும், வியான் முல்டர் 34 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளும், குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 239 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    • அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது.

    இந்நிலையில் அப்படி எந்த கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் அதே சமயம் அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது. எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தை ஒட்டி, அந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வர, ஐபிஎல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    • ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
    • கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது.

    2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.

    என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

    நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.

    79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.
    • பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது.

    ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ப்ரீத்தி ஜிந்தா தான்.

    ஒருகாலத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக கோலோச்சிய ப்ரீத்தி ஜிந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.

    பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது. சக உரிமையாளர்களான மோஹித் பர்மனுக்கு 48% பங்குகளும் நெஸ் வாடியாவிற்கு 23% பங்குகளும் கரண் பாலுக்கு 6% பங்குகளும் உள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளரான மோஹித் பர்மன் தனது பங்குகளில் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பினருக்கு விற்பதைத் தடுக்க கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை ப்ரீத்தி ஜிந்தா நாடியுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

    மோஹித் பர்மன் தனது பங்குகளில் 11.5 சதவீதத்தை விற்க உள்ளார் என்றும் இது ப்ரீத்தி ஜிந்தாவிற்கு சாதகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை மோஹித் பர்மன் மறுத்துள்ளார்.

    • பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.

    இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், "கொல்கத்தா பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், " கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக மருத்துவர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று கூறுவார்கள்.

    அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என்றார்.

    • லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது நிரோஷன் டிக்வெல்லா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணியின் தொடக்க வீரரான நிரோஷன் டிக்வெல்லா. இவர், இலங்கை அணிக்காக 2014-ம் ஆண்டு அறிமுகமான நிலையில் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31.45 சராசரியில் 1,604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.98 சராசரியில் 2,757 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு 28 டி20 போட்டிகளில் 480 ரன்களைச் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரோஷன் டிக்வெல்லாவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும் அவர் கொக்கெய்ன் உட்கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்தும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதன் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்லாமல் பயிற்சி உட்பட விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இனி கிரிக்கெட் விளையாடமுடியாமல் போவதுடன், எந்தவொரு போட்டியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாது என்பதால் அவரது கிரிக்கெட் கெரியர் இத்துடன் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கோவிட்-19 நெறிமுறையை மீறியதால் அவருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த எல்பிஎல் தொடரில் கலே மார்வெல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய டிக்வெல்லா, அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்த சீசனில், அவர் 10 இன்னிங்ஸ்களில் 153.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 184 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் அரை சதம் விளாசினார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கயானா:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    முதல் இன்னிங்சில் வெறும் 54 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வேட் 3 ரன், கீசி கார்டி 26 ரன், அலிக் அத்தானாஸ் 1 ரன், கவேம் ஹாட்ஜ் 4 ரன், ஜோசுவா டா சில்வா 4 ரன், குடாகேஷ் மோதி 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 28.2 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஜேசன் ஹோல்டர் 33 ரன்னுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாரிக்கன் 0, ஜெய்டன் சீல்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனையடுத்து ஹோல்டருடன் சமர் ஜோசப் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோல்டர் அரை சதம் விளாசினார். இறுதியில் சமர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 144 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை.
    • நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2016-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே முன்னாள் கேப்டன்களான டோனி மற்றும் விராட் கோலி போன்ற கேப்டன்கள் செய்த செயல் தான் என அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிகள் நான் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன் என்று டோனியிடம் கேட்டபோது : அவர் அணியின் காம்பினேஷனில் நான் பொருந்தவில்லை என்று கூறினார். மேலும் நான் விளையாட வாய்ப்பு கேட்டபோது காம்பினேஷனுக்கு செட் ஆகவில்லை என்றால் ஓய்வு வழங்கப்படும் என்றுதான் கூறினார். டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை. நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

    அதேபோன்று 2016-ம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது கோலி தான் என்னை ஆதரித்தார். ஆனாலும் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரும் என்னை அணியில் இருந்து நீக்கினார். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அவருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் நான் அதிக எடையை தூக்கி பயிற்சி செய்ய முடியாது என்று கூறினேன்.

    அதன் பின்னர் கோலியும் என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டு எனக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன். ஆனாலும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை.

    இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

    • இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.
    • இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே சதம் அடித்திருந்தார்.

    பெல்பாஸ்ட்:

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் முதலாவது ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 260 ரன்கள் எடுத்தது.

    இலங்கை தரப்பில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன சதம் (101 ரன்) அடித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 261 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து ஆடி வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் விஷ்மி குணரத்ன சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.

    இதற்கு முன் இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே (9 சதம்) சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×