search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணி 138 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கதில் இருந்தே அதிரடியாக விளையாடிய ரோகித் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஷ்ரேயாஸ் அய்யர் 8, அக்ஷர் படேல் 2, ரியான் பராக் 15, சிவம் துபே 9 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக விராட் கோலி அவுட் என தெரிந்தும் தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்தார். இவரை போன்று ஷ்ரேயாஸ் அய்யர் அவுட் என தெரிந்தும் ரிவ்யூ எடுத்து வெளியேறினர்.

    இவர்களையெல்லாம் தவிர ரியான் பராக் அவுட் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டெம்புக்கு வருகிற பந்தை பேட்டை தூக்கி வைத்து கொண்டு பந்தை விட்டுவிட்டார். இதனால் பந்து ஸ்டெம்பை தாக்கியது. பேட்டை வைத்து தட்டாமல் ஸ்டெம்புக்கு போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தது என்னடா பேட்டிங் பன்ற என்பது போல இருந்தது.

    இதனால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் ஜோடி பொறுப்புடன் ஆடினர். அதிரடியாக விளையாடிய சுந்தர் 25 பந்தில் 30 ரன்களுடன் வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களில் அடங்கியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இதனால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணிக்கு கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இலங்கை அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - பெர்னாண்டோ களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தது. நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்னாண்டோ சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் அசலங்கா 10, சதீரா 0, ஜனித் லியனகே 8, துனித் வெல்லலகே 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் பொறுப்புடன் விளையாடிய குசல் மெண்டீஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
    • இந்த போட்டியில் ரியான் பராக் அறிமுகமானார்.

    இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ரியான் பராக், ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.

    இந்த போட்டியில் அறிமுக வீரராக ரியான் பராக் களமிறங்குகிறார். இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 256 வீரர் ஆவார். அவருக்கி நட்சத்திர வீரர் விராட் கோலி தொப்பி வழங்கினார்.

    இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வான முதல் அசாம் மாநில வீரர் ரியான் பராக் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனி தலைமையில் இந்தியா ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது.
    • டோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்து பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த டோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

    இந்நிலையில் விராட் கோலி, ரோகித், தாம் போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு டோனி முக்கிய காரணமாக இருந்ததாக ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    டோனியுடன் விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. ஏனெனில் அவர் உங்களை வளர அனுமதிப்பார். அவர் எப்பொழுதும் எங்களை சொந்த திட்டத்துடன் விளையாட அனுமதிப்பார். அவர் எப்போதும் எங்களுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்க மாட்டார்.

    குறிப்பாக 'நாளை நான் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டேன். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே உங்கள் அறைக்கு சென்று உங்களுடைய விளையாட்டை சிந்தித்து திட்டத்துடன் வாருங்கள். அது வேலை செய்யவில்லையென்றால் நான் உதவி செய்கிறேன்' என்று டோனி எங்களிடம் சொல்வார்.

    3 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் பல இளம் வீரர்களை வளர்த்து தனது மரபை விட்டு சென்றுள்ளார். தற்போதைய மகத்தான வீரர்களான விராட், ரோகித் போன்றவர்கள் கூட ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகத்தான எம்.எஸ். டோனி அவர்களை ஆதரித்தார். அந்த ஆதரவுடன் அவர்கள் 2012-க்குப்பின் இப்போது வரை அசத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.

    • விராட், ரோகித்துக்கு ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
    • இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை.

    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால் கம்பீரின் முடிவால் விராட் மற்றும் ரோகித் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர்.

    இந்நிலையில், இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்ததாக 2 - 3 மாதங்கள் கழித்து தான் விளையாட உள்ளது. இது நமக்கு அரிதானது. எனவே விராட், ரோகித் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதால் அனுபவ வீரர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்பது தெரிகிறது.

    ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப் பற்றி கம்பீர் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. விராட், ரோகித்திடம் சமமான உரிமையை பெறுவதற்கு கம்பீர் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அடுத்த தொடரில் விராட், ரோகித்தை விளையாட வைத்து விட்டு கம்பீர் இத்தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது இத்தொடரின் ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம் பிடித்துள்ள்னர்.
    • ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய வீராங்கனைகள் உள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

    அதன்படி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் மற்றும் இந்திய ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அதேபோல் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படுகிறார்.
    • வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் நேராக இல்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    தற்போது 52 வயதில் இருக்கும் வினோத் காம்ப்ளி , கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது.

    இந்நிலையில் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வினோத் காம்ப்ளியால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. கால்கள் நேராக இல்லை.

    இந்த வீடியோ சிகர்களிடையேயும் கிரிக்கெட் வட்டாரங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கர் நிச்சயம் உதவி புரிய வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கிரிக்கெட் உலகில் 1990-களில் சச்சின் டெண்டுல்கர் நுழைவையடுத்து வினோத் காம்ப்ளியின் நுழைவும் தூள் கிளப்புவதாக அமைந்தது. அதிரடி இடது கை வீரராக இரண்டு இரட்டைச் சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தார். 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வரலாற்று வெற்றியில் இவரது பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி களத்தில் 120/8 என்று மடிய ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபட ஆட்டம் கைவிடப்பட்டது.

    அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே பெவிலியன் சென்ற காட்சியை யாரும் மறப்பதற்கில்லை. இந்தியா வெளியேறியது. அப்போது இவர் கேப்டன் அசாருதீனை அவரின் அறைக்குச் சென்று கடுமையாக வசையை பொழிந்ததாகவும் செய்திகள் உலாவின. அதன் பிறகே இவரது கரியர் கொஞ்சம் பின்னடைவு கண்டது. பிறகு காயங்கள், சொந்த நடத்தை விவகாரங்கள் ஆகியன ஒரு அற்புதமான உலக பிரசித்தி பெற வேண்டிய வீரரை அழித்து விட்டது.

    17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்கள் எடுத்துள்ளார். 

    • பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
    • முதல் முறையாக இந்த தொடரில் விளையாட உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா SA20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெறுகிறார். இவர் இந்த தொடரின் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கும் புதிய SA20 சீசனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன்பிறகு இவர் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    • போராட்டங்கள், வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    • ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. எனினும், இந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்காளதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்காளதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்காளதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

    • கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 171-வது ஒருநாள் போட்டியாகும்.

    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது.

    இந்தியா- இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இந்திய அணியின் பேட்டிங்கும், பந்து வீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் அதில் இருந்து மீள்வது அவசியமாகும்.

    அசலன்கா தலைமையிலான இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 20 ஓவர் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 171-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 168 ஆட்டத்தில் இந்தியா 99-ல், இலங்கை 58-ல் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டி முடிவு இல்லை. 2 ஆட்டம் டை ஆனது.

    நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • காம்பீர் குறித்து சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
    • அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சுபாவம் குறித்து அவரது இளமைக்கால  கிரிக்கெட் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

     

    காம்பீரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வரும் பரத்வாஜ், 12 -13 வயது சிறுவனாக இருக்கும்போது கூட காம்பீர் சிறிய தோல்வியையும் தாங்கிக்கொள்ள முடியாதவராகவே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அப்போது மட்டுமல்ல இப்போதும் காம்பீர் ஒரு அப்பாவியான சிறுவன்தான். அவரால் பிறருக்கு தீங்கு நினைக்கவே முடியாது. ஒரு 12 வயது பையன் போலவே இப்போதும் அவர் உள்ளார்.

     

    பலர் அவர் திமிர்பிடித்தவர் என்று கருதுகின்றனர். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே அது தொடர்புடையது. சிறு வயதில் நெட்டுக்குள் அவரை நான் விளையாட வைப்பதுண்டு. அந்த மேட்ச்களில் தொற்றால் கூட காம்பீர் அப்படி அழுவார். அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.  

     

    • 18 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 1997-ம் ஆண்டு கைப்பற்றி இருந்தது.

    கொழும்பு:

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்பு மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதாவது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1108 நாட்களுக்குப் பின் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி உள்ளது. கடைசியாக ஜூலை 2021-ல் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் 3-வது போட்டியில் இந்தியா வென்றால் இந்த தொடரை 1 - 1 என சமன் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை இலங்கை அணி 3-வது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 2 - 0 என கைப்பற்றும். எனவே, இந்தியா இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. இதனால் 18 ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன. அதனால், அந்த தொடர் 0 - 0 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. அந்தத் தொடர் சமன் செய்யப்பட்டது.

    அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கும் கூட இந்திய அணி 3-வது போட்டியில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தொடரை சமன் செய்ய முடியும். ஒரு வேளை இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த மோசமான சாதனையை செய்யும்.

    கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×